(Reading time: 5 - 9 minutes)

தொடர்கதை - கிபி டு கிமு - 02 - சுபஸ்ரீ

Kipi to kimu

ன்புள்ள கி பி க்கு

உன் கடிதம் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி. நான் இங்கு நலம். நீ நலமா?

சிமி பாட்டி, கோக்குல். வரின், ஹிட்லர் அனைவரும் நலம். இங்குள்ள அனைவர் மனதிலும் நீ இடம் பிடித்துவிட்டாய். ஐந்து ஆண்டுகள் அல்ல . . ஆயுள் முழுக்க நீ அவர்கள் மனதில் இருப்பாய்

எனக்கும் உன்னைப் போல்தான். நாம் சந்தித்த தினம் இன்னமும் மனதில் பசுமையாய் உள்ளது. வேறு எந்த நிகழ்வும் என் நெஞ்சை இப்படி பாதித்தது இல்லை.

எங்கள் தாய்மை கருணை இல்லத்திற்கு வருவோரில் பெரும்பாலும் உன்னை மறக்க மாட்டேன் என கூறுவதுண்டு. ஆனால் பின்பு அவர்களிடமிருந்து எந்த தொடர்பும் இருக்காது. நீயும் அப்படிதான் என நினைத்தேன்.

என் கணிப்பை பொய் ஆக்கியமைக்கு நன்றி. சத்தியமாய் உன்னிடத்தில் இருந்து கடிதத்தை எதிர்பார்க்கவில்லை. இது என் பெயருக்கு வரும் முதல் கடிதம். எத்தனை பொக்கிஷமானது என உன்னால் உணரமுடியாது.

என் வாழ்க்கை கதை உனக்கு புதியதாக இருக்கிறது என குறிப்பிட்டு இருந்தாய். ஆனால் இங்கு பெருமபாலும் அனைவரின் நிலையும் ஒன்றே. நான் பிறந்து ஒருசில நாட்களே ஆன போது என் தாய் என்னை இங்கே விட்டுவிட்டார்களாம்.

நான் அவருக்கு என்ன கொடிய தீங்கை இழைத்தேன் என்றும்  புரியவில்லை. ஆனால் என் அப்பா பெரிய பணக்காராம். இது மட்டுமே எனக்கு கிடைத்த தகவல். அவருக்கு ஏனோ என் மீது பாசம் இல்லை.

அவர் மகள் இங்கு கஷ்டப்படுவதை கண்டு அவர்களுக்கு துக்கமில்லை. என்னைப் பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. நான் மட்டும் ஏன் முகம் தெரியாத அந்த நபர்களை மனதில் சுமக்க வேண்டும் என்று மறந்துவிட்டேன். சில தருணங்களில் மனம் துவண்டுப் போவதுண்டு.

இப்படியே நாள் ஒரு மேனி பொழுது ஒரு வண்ணமுமாய் இருபது வருடங்களுக்கு மேல் கழித்தாயிற்று. என் அருகிலேயே என் குடும்பத்தினர் இருந்தாலும் எனக்கு அவர்களை இனங்காணத் தெரியாது. எத்தனை கொடுமையான விடயம்.

இங்கு உள்ள பலர் பிறந்த சில தினங்களிளோ அல்லது மாதங்களிளோ இங்கு வந்துவிட்டனர். பெற்றோர் எவர் என தெரியாது. சிலருக்கு தெரியும் ஆனால் பாசத்தோடு அழைக்க உரிமை இல்லை.

குழந்தைகளை இங்கே விட்ட பெற்றோர் சிலர் என்றால் பெற்றோரை இங்கேவிடும் சில குழந்தைகளும் உண்டு. ஆம் அவை வளர்ந்த குழந்தைகள். பெற்றோரை பாரமாக கருதும் பிள்ளைகள். இனி நீங்கள் எங்களுக்கு தேவை இல்லை என பெற்றோரை வீசிவிட்ட பிள்ளைகள்.

பெற்றோர் இல்லாத ஏக்கத்தை குழந்தைகள்கூட சமாளித்துவிடும். ஆனால் தாங்கள் வளர்த்த பிள்ளைகள் நிர்கதியாக விட்ட முதியவர்கள் ஏக்கத்தை களைவதுதான் மிகவும் கடினம். பாசத்தையும் அன்பையும் கொட்டி வளர்த்த பிள்ளைகள் அவர்களை வேண்டாம் என தூக்கி எறிந்த விடுகிறார்கள். இதனால் பெற்றோர் மனதளவில் உடைந்து மனஉளைச்சலுக்கு ஆளாகி விடுகிறார்கள். அவர்களை தேற்றுவது மிக கடினம்.

இங்கு பணிபுரிபவர்கள் தாயாக தந்தையாக மகனான மகளாக பல அவதாரங்கள் எடுத்து எங்களை பாதுகாப்பாக கவனித்துக் கொள்கிறார்கள்.   

இங்கு வசிப்பவர்களுக்கு என்று தனி விதியுள்ளது. மற்றவர்களின் பழைய ஆடைகள்தான் எங்களுக்கு புத்தாடை.. மற்றவர்களுக்கு தேவை இல்லாத குப்பைதான் எங்களுக்கு பொக்கிஷம்.

எங்களுக்கு எங்கள் பிறந்தநாள் தெரியாது. ஆனால் யாரோ முன்பின் தெரியாத நபர் சிலர் இங்கு  எங்களுடன் அவர்களுடைய பிறந்தநாள் அல்லது திருமணநாளை கொண்டாடுவார்கள்.

எங்களுக்கு நிறைய திண்பண்டம் இனிப்புகளை கொடுப்பார். சில நல்ல ஜீவன்களின் நன்கொடையால் நாங்கள் உணவு உண்கிறோம்.

சில மனிதர்கள் தங்களுக்கு தேவையில்லாத பொருட்களை  இங்கு தானம் என்கிற பெயரில் கொடுப்பார்கள். அவை பெரும்பாலும் கிழிந்த உடைகள் தாம் இருக்கும். அனாதைகள் நல்ல உடை உடுத்தக் கூடாது என சட்டம் உள்ளதா தெரியவில்லை.

அதற்கு பதில் தேவையான பொருட்களான சோப், பேஸ்ட், எண்ணை, சானிடரி நாப்கின், புத்தகம், பேனா, பென்சில், சமையலுக்கு தேவையான பொருட்கள் என்று கொடுக்கலாம்.

இது என் முதல் கடிதம் ஆதலால் மனதில் உள்ளவற்றை எல்லாம் அப்படியே கொட்டிவிட்டேன். என் உணர்வுகளையும் பகிர ஒருவர் உள்ளார் என நினைக்கையில் நிம்மதியாக உள்ளது.

பரிட்சைப் பற்றி கவலை வேண்டாம் கிபி. மதிப்பெண் மட்டுமே வாழ்க்கை இல்லை.

உன் பெற்றோர் மற்றும் தம்பியை சந்திக்க ஆவலாய் உள்ளேன். எங்களுடைய பாதுகாப்பிற்காக தான் இங்கு போன் பேச அனுமதி இல்லை. 

எனக்கு போன் வாங்கி வர வேண்டாம். நான் படித்து பட்டம் பெற் வேண்டும். பின்பு நல்ல வேலைக்கு செல்ல வேண்டும். என் சம்பள பணத்தில் போன் வாங்க வேண்டும். இப்படி பல “வேண்டும்“கள் உள்ளன. ஆதலால் என் ஆசை மற்றும் என்னுள் உள்ள வேகத்தை குறைத்து விடாதே.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.