ப்ரித்வி கவனமாக இருந்தும் கிருத்திகா மாட்டிக் கொள்ளும் சூழ்நிலை உருவானது. மேலும் பல மடங்கு கவனமாக இருந்தான். எத்தனை வேலையிலும், கூட்டத்திலும் கிருத்தியின் மேல் தன் பார்வையை வைத்து இருந்தான். அது ஏற்றுக் கொண்ட பொறுப்பைச் செவ்வனே செய்யும் எண்ணமும், இயல்பான சக மனித பாதுகாப்பும் மட்டுமே.
ஆனால் ராணா பிரதாப் சிலை இருக்கும் அந்தக் குன்றிற்கு சென்று வந்தபின் அவனிடத்தில் வேறு சில மாறுதல்கள். கிருத்தியைத் தன் அருகில் வைத்துப் பாதுகாக்க வேண்டும் என்ற தவிப்பு ஏற்பட்டு இருந்தது. அதை அவன் அதிகமாக யோசிக்கவில்லை என்றாலும், முதலில் இருந்ததை விட கிருத்தி மேல் அவனின் பிடிப்பு அதிகமாகி இருந்ததை உணர்ந்து தான் இருந்தான்.
கிருத்தி தன் கனவைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்த பிறகு இன்னுமே அவளிடத்தில் அவன் நெருக்கம் கூடியது.
கிரண் தேவி பற்றிச் சொன்ன விஷயங்கள் அவனின் அடிமனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. எந்த வேலையிலும் அவன் உள்மனது கிருத்தி சொன்ன கனவு சம்பவங்களையே சுற்றியதில் , அனைத்தையுமே அந்தக் காலக் கட்டத்தோடு இணைத்து யோசித்துக் கொண்டு இருந்தான்.
அதே எண்ணத்தில் முதல் நாள் இரவு படுத்து இருந்ததில், கிருத்திக்கு வந்த கனவுகள் அதாவது பழைய ஆம்பர் நகரம், தற்போதைய ஜெய்பூர் கோட்டையில் நடந்தது என அக்பர் , ஜோதா, கிரண் தேவி சேர்ந்த சம்பவங்கள் கனவில் தோன்றியது.
கிருத்தி இதைக் கனவு என்றுச் சொல்லியதால் அந்த வார்த்தை சொன்னாலும், ப்ரித்விக்கு இது உள்ளுணர்வாகவே தோன்றியது. இன்னும் சொல்லப் போனால் அதையும் தாண்டிய ஏதோ ஒன்றாகவே எண்ண வைத்தது. அதை ஆராய தற்போது நேரம் இல்லாததால், அடுத்து என்ன செய்வது என்ற திட்டத்தில் இறங்கினான்.
அக்பர், கிரண் தேவி மற்றும் ப்ரித்வியை அறிந்து கொண்டார் என்ற திகிலிலும், மற்ற மாணவர்கள் விழிக்கின்ற சத்தத்திலும், கிருத்தி, ப்ரித்வி இருவருமே சட்டென்று முழித்துக் கொண்டு விட்டனர். இதன் தொடர்ச்சி அன்று இரவு தானே மீண்டும் கிடைக்கும் என்ற சஞ்சலத்தில் இருந்தனர்.
காலை உணவு முடித்ததும், ஜெய்பூரில் மற்றுமொரு அழகான இடமான ஜல் மஹால் பார்க்கச் சென்றனர். பதினெட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த அரண்மனை ஐந்து அடுக்குகள் கொண்டது. நீர் வரத்துக் காலங்களில் கீழ் நான்கு அடுக்குகளும் நீரில் மூழ்கி விட, ஐந்தாம் அடுக்கு மட்டுமே காட்சிக் கிடைக்கும். முழுதும் மணல் கற்களால் கட்டப்பட்ட அரண்மனை.