செய்யும் இடத்திலேயே தங்க வேண்டி வந்ததால் வாரம் ஒரு முறை தான் வர முடியும் என்று சொல்லி சென்றிருந்தான். அவன் கிளம்பும் பொது உமாவை தூக்கி கொஞ்சியதையும் உமா அவன் இருக்கும் வரை அவனோடு உரிமையுடன் விளையாடி செல்லம் கொஞ்சி கொண்டிருந்ததையும் கண்டவளுக்கு அவளின் அன்னையின் இழப்பு கண்ணீரை வரவைத்தது. அப்பாவாவது இருந்திருக்கலாம் என ஏங்கியது அந்த சின்ன பெண்ணின் மனம்.
ஒவ்வொரு வாரமும் மாரியப்பன் வரும்போது அவன் உமாவுக்காக என்று ஏதேனும் வாங்கி வரும்போது இவள் மனம் ஏங்கும். ஆனால் அவளுக்கு அதற்கும் கண்ணம்மாவிடம் இருந்து திட்டு தான் விழுந்தது. அதிர்ஷ்டம் இல்லாதவள். பிறந்ததும் அப்பன்காரன் ஓடி விட்டான். இதோ வளரும்போதும் அம்மாவையும் விழுங்கிவிட்டாள். இவள் கண் பட்டால் அவள் பெண்ணுக்கு ஏதேனும் நேரும் என. அவள் சொல்வதில் பாதி பவித்ராவுக்கு புரியாவிட்டாலும் அவளின் வெறுப்பு அந்த சிறுபெண்ணுக்கு புரிந்தது.
அன்று காலை வெகு நேரமாகியும் பவித்ரா காபி கொண்டு வராமல் இருக்கவும் வெளியே வந்த கண்ணம்மா, பெருக்கியும் பாதி பெருக்காமல் இருந்த வாசலை பார்த்தவள் கோபத்துடன் "அடியே பவித்ரா...எங்க போயி தொலைஞ்ச? விடிஞ்சு எவ்ளோ நேரமாச்சு? ஒரு வாசலும் கூட ஒழுங்கா பெருக்கல..."கத்தி கொண்டே கொல்லைப்புறம் செல்ல அங்கே துணி துவைக்கும் கல்லுக்கு அருகே கால்களை மடக்கி உட்கார்ந்து அழுது கொண்டிருந்தாள் பவித்ரா.
அக்கம் பக்கத்து பெண்கள் சிலர் அங்கிருக்க, அங்கிருந்த வயதான பெண்மணி மனையில் உட்கார வைத்து பவித்ராவை குளிப்பாட்டினார். அங்கு ஓலை கொண்டு கொள்ளையில் வேயப்பட்டிருந்த கூரைக்குள் பவித்ராவை அழைத்து போய் அவளுக்கு உடை மாற்றி உட்காரவைத்தவர், "ராசாத்தி" என அவளை நெட்டி முறித்தார்.
"ஹ்ம்ம் என்னத்த சொல்ல, இந்த நேரத்துல உன் ஆத்தா இல்லாம போயிட்டாலே. உன் அத்தை காரி உன்னை நித்தமும் வைய்யிறதை பார்த்துட்டு தான் இருக்கேன், அவ உனக்கு இதெல்லாம் சொல்லி தருவாளான்னு தெரியல. இனிமே தான் பார்த்து பதனமா இருக்கணும் தாயி. பெரியமனுஷி ஆயிட்ட. கழுகு எல்லாம் சுத்தி வரும் பதனமா இரு." அந்த பாட்டி சொல்லி செல்ல, இவளுக்கு புரியவில்லை என்றாலும் மனதிற்குள் ஒரு பயம் ஊடுருவியது.
"வாயா வா... " உள்ளே நுழைந்த மாரியப்பன் வீட்டிற்குள் இருக்கும் பெண்களை பார்த்து என்ன என்பதை போல பார்த்தான் கண்ணம்மாவை.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.
Advance new year wishes to you and ur family💐