(Reading time: 10 - 19 minutes)
Kanavu Meippadum
Kanavu Meippadum

தொடர்கதை - கனவு மெய்ப்படும் – 05 - ஜெய்

ஷ்யாமளா அவதி அவதியாக பள்ளியிலிருந்து வந்து பார்த்தது, சுருண்டு படுத்திருந்த மைத்தியைத்தான்... பெண்கள் வீட்டு விலக்காகும் நாட்களில் தங்குவதற்கென்று கொல்லைப்புறத்தில் இருந்த அறையில் படுத்திருந்தாள்....

மைத்திக்கு சிறு வயதில் இருந்து ஆகவே ஆகாத விஷயம் தனிமை... எப்பொழுதம் அவளை சுற்றி யாரேனும் இருக்க வேண்டும்... பள்ளிக்கு கூட தன் மாமா பெண்களுடனோ இல்லை தோழிகளுடனோ சென்றே பழக்கம்... முதல் முறை இப்படி யாரும் கூட இல்லாமல் தனிமையில் அவள் இருந்த கோலமே ஷ்யாமளாவை வருத்தம் கொள்ள வைத்தது....

“மைத்திக்குட்டி எழுந்துருடா... அம்மா வந்திருக்கேன்...”,ஷ்யாமளா கூப்பிட, அடித்து பிடித்து எழுந்தமர்ந்தாள் மைத்தி....

“அம்மா....”, என்றபடியே அருகில் வர பார்க்க...

“அம்மாவை தொடப்படாதுடா.... வயறு ஏதானும் வலிக்கறதாடா...”

“வயத்தை வலிக்கலைம்மா.... காலெல்லாந்தான் வலிக்கறது... அதைவிட இங்க தனியா இருக்கறது ரொம்ப கஷ்டமா இருக்கும்மா.... நான் ஆத்துக்கு வந்து கூடத்துல உக்கார்ந்துக்கட்டா....”

“அது சரிப்படாதுடாம்மா... நீ இங்கயே ரெஸ்ட் எடுத்துக்கோ... நான் அப்போ அப்போ வந்து பார்த்துக்கறேன் சரியா....”

“போம்மா நான் பாட்டுக்கு ஒரு ஓரமா உக்கார்ந்துக்கறேனே... யாரு என்ன சொல்லப்போறா...”

“யாரும் சொல்றதுக்காகன்னு இல்லைடா...”

“ஷ்யாமளா நீ போய் மைத்திக்கு சூடா காப்பி போட்டு எடுத்துண்டு வா... நான் அவளை சமாதானப் படுத்தறேன்....”,இவர்கள் வாதாடிக்கொண்டிருக்கும்போது  அங்கு வந்த கற்பகம்  பாட்டி  கூற, ஷ்யாமளாவும் அரைகுறை மனதுடன் அகன்றார்....

“யாரு பாட்டி இதெல்லாம் கண்டுபிடிச்சது... நானும் பையனாவே பொறந்திருக்கலாம்... ஜாலியா இருந்திருப்பேன்....”

“பொம்மனாட்டியா பொறக்கறது பூர்வ ஜென்ம புண்ணியம்டி கோந்தே... நம்மாத்து லக்ஷ்மியாக்கும் நீ...”

“போ பாட்டி... இந்த வலியையும், தனிமையும் பார்த்தா புண்ணியம் பண்ணினா மாதிரி தெரியலை... ஏதோ நிறைய பாவம் பண்ணினா மாறி இருக்கு....”

“அசடாட்டம் பேசக்கூடாதுடி கோந்தே... பொம்மனாட்டிகள்தான் ஒரு வீட்டின் சக்தி தெரியுமோ... அந்த அம்பாளோட அம்சம்... அம்பாள் எப்படி இந்த உலகத்தை காத்து ரட்சிக்கறாளோ அப்படித்தான் ஒவ்வொரு பொண்ணும் அவா அவா ஆத்தை ரட்சிக்கறா...”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.