தொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன்! - 06 - சாகம்பரி குமார்
"ரேச்சல்... ஜெமி கால் பண்றான்"' என்று ஷீலா அழைத்தார்.
அப்பொழுதுதான் உறக்கம் வர படுக்க சென்று இருந்தவள்.. புலம்பிக் கொண்டே எழுந்து சென்றாள். அங்கே ஸ்கைப்பில் ஜெமி காத்திருந்தான்.
அவனை பார்க்கவும், " ஹாய்" என்றாள்.
" என்ன தூக்க கலக்கமாக இருக்கிறாயா?"
"இல்ல… ஜாலியா டான்ஸ் ஆடிட்டு இருந்தேன்."
"பட், உன்னோட லுக் அப்படி தெரியலை"
"தெரியுதுல்ல… அப்புறம் எதுக்கு கேட்கற..
இப்பதான் தூங்க போனேன். அதுக்குள்ளார எழுப்பிட்டியே" என்றாள்.
உண்மை அதுவல்ல.. அவள் அன்று முழுவதும் இருந்த கோபத்திலும் பதட்டத்திலும் அவளுக்கு உறக்கமே வரவில்லை. சோர்வாகவும் ஆகிவிட்டாள். உறக்கம் வராமல் நெடு நேரம் கழித்து கண்ணயர்ந்தாள். அதற்குள் அவன் அழைப்பு வரவும் இடையில் எழுந்ததினால்… அவளுக்கு இன்னும் தூக்க கலக்கம் போகவில்லை
"ஐ அம் சாரி. உன்னை தூக்கத்துல டிஸ்டர்ப் பண்ணனும் நான் நினைக்கல. இந்தியா வர்றதுக்கு நான் பேக் பண்ண ஆரம்பிச்சுட்டேன். உனக்கு எதுவும் வாங்கிட்டு வரணுமான்னு கேட்பதற்காக கால் பண்ணேன்."
அரை குறை தூக்கத்திலும் மனதில் சத்யனின் மீதிருந்த கோபத்தினாலும் அவள்,
" எனக்கு வெயிட்டான ஒரு செங்கல் வேணும்" என்று உளறி வைத்தாள்.
அதை கேட்ட ஜெமி ஜெர்க் ஆனான்… செங்கல் வேணுமா… வேறு எதையோ தப்பா சொல்றாளா…? அவனுடைய பாஸ் சவுதியிலிருந்து உண்மையாகவே தங்க செங்கல் கொண்டு வந்திருந்தார். அது மாதிரி எதுவும் மினியேச்சர் கோல்ட ப்ரிக் கேட்கிறாளா?..
"வாட்… செங்கல்?' என்று கேட்டான்.
அவளுக்கு அந்த கேள்வி சட்டென காதில் லேண்ட் ஆக…செங்கல்னா என்னாங்கறானே… அதுக்கு இங்கிலீஷ்ல என்ன…?. மறந்து போச்சே… என்று நினைக்குபோதே… கல்பி சொன்ன 'மறதி பைத்தியம்' நினைவிற்குவர… டென்சன் ஆனாள்.
"வாட் செங்கல்னா… ஆங்...பில்டிங் கட்டிங் ஸ்டோன்… ஒன்.பை ஒன் அடுக்கி வச்சிங்… வீடு கட்டிங்...ம்… சிமெண்ட் புட்டிங்.."
"போதும்மா… எனக்கு செங்கல்னா என்னனு தெரியும். அது உனக்கு எதுக்கு வேணும் என்றுதான் கேட்டேன்" கையெடுத்து கும்பிட்டு கேட்டான்.
"அது எனக்கு எதுக்கு…?"