நிச்சியதார்த்த புடவை வாங்கத்தான் அனைவரும் கடைக்கு வந்திருந்தனர்.
பாட்டியின் முதல் கண்டிஷன் பிருந்தாக்கு புடவை அவளே தான் செலக்ட் பண்ணனும். எல்லாரும் சேர்ந்து ஷாப்பிங் போகலாம் என ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்ததே பாட்டி தான்.
அதற்கு காரணம் வேறு யார்? தனுஷ் தான்.
பெண் பார்த்து வந்ததிலிருந்து தனுஷின் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, சஞ்சய் என அனைவரும் “ பிருந்தா கிட்ட பேசினியா?” என ஒற்றை கேள்வியோடு அவனை துரத்த
தனுஷ் “இன்னிக்கி மீட்டிங்”
“டைம் இல்ல”
“நாளைக்கு பேசுறேன்” இப்படியே சொல்லிக்கொண்டு இருக்க
அந்த எதிர்பார்த்த திருநாளும் வந்தது தனுஷ் இரண்டே நிமிடம் பேசினான் அதுவும் ஹாலில் இருந்தபடி “ஹாய் எப்படி இருக்க பிருந்தா?”
“..............”
“ம்ம் . . யா பைன் . . . அங்க மழையா?”
“...........’
“ஒகே பை . . ப்ரீயா இருக்கும்போது கால் பண்றேன்” என வைத்து விட்டான்.
“இன்னிக்கு அங்க மழையா?” ஹாலில் பாட்டியுடன் அமர்ந்திருந்த சஞ்சய் கேட்டான்.
“ஆமா” அலுவலக பணியை கவனித்தபடி
“நேத்தும் மழையா?”
“தெரியல”
“நாளைக்கு மழை வருமா?”
“இல்ல . . அது” என தனுஷ் முழித்து பின்னர் தான் உணர்ந்தான் தன்னை சஞ்சய் கலாய்ப்பதை
“உன்ன வானிலை அறிக்கையா கேக்க சொன்னாங்க?”
தான் சொதப்பியது புரிந்தது இருந்தாலும் சமாளிக்கவேண்டி “இப்பவே எல்லாம் பேசிட்டா . . கல்யாணத்துக்கு அப்புறம் போர் அடிக்கும் . . . லைப்ல த்ரில்லிங் வேணும் . . . இந்த காத்திருப்பு இருக்கே இது ஒரு அழகான பீல் . . இதெல்லாம் உனக்கு இப்போ புரியாது . . உனக்கு கல்யாணம் நிச்சயம் ஆகும்ல . . அப்போ பாத்துக்கிறேன்” என மீண்டும் தன் வேலையில் கவனம் செலுத்தினான். தன் மனதை மற்றவர்களால் புரிந்துக் கொள்ள இயலாது என எண்ணினான்.
“பாட்டி . . . சாமியாரை நாம சம்சார சாகரத்துல தள்ளுரோமா?” பாட்டி காதை சஞ்சய் கடித்தான்.
“நான் ஒரு பிளான் வெச்சிருக்கேன்” பாட்டி தன் மூக்கு கண்ணாடியை சரி செய்தார். அவர் இப்படி செய்தால் ஆழ்ந்த சிந்தனையில் உள்ளார் என்று அர்த்தம்.