தொடர்கதை - உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் - 08 - ராசு
மகாலட்சுமி தங்கள் வீட்டு பால்கனி வழியே வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
முகம் சுரத்தில்லாமல் இருந்தது. திருமணமாகி அவள் இந்த வீட்டிற்கு வந்து ஒரு வார காலமாகிவிட்டது.
இந்த ஒருவார காலத்தில் மாதவன் நடந்துகொண்ட முறையில் அவனுக்குத் தன்னைப் பிடிக்கவில்லை என்பதை நன்றாக உணர்ந்திருந்தாள்.
அதன் பிறகும் அவன் ஏன் தன்னை மணந்துகொள்ள வேண்டும்?
அதுதான் அவளுடைய அன்னை கூறினாளே. அவன் திருமணத்தை மறுக்கத்தான் செய்திருக்கிறான். ஆனால் ஜாதகப் பொருத்தம் அது இதென்று இவள் வீட்டினர்தான் அவனுடைய மாமா மூலமாக அவனை திருமணத்திற்கு நெருக்கியிருக்கின்றனர். அவனும் இவளைப் பழிவாங்கவென்று இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டான் போலும்.
போலும் என்ன? அதுதான் அவன் வாயாலேயே கூறினானே.
ஆனாலும் அவளுக்கு இப்போது வரைக்கும் ஒன்றும் புரியவில்லை. அவனுக்கு அவள் மீது அப்படி என்னதான் கோபம்?
அதை அவள் கேட்டும் பார்த்துவிட்டாள். அவளை ஒருபார்வை பார்த்துவிட்டு பதிலே சொல்லாமல் சென்றுவிட்டான்.
என்ன என்ன என்று யோசித்தே தலை வெடித்துவிடும் போலிருந்தது. அதற்காகத்தான் அப்படி சொல்லாமல் விட்டானோ?
இந்த ஒருவார காலத்திற்குள் எத்தனை கெடுபிடிகள்.
அவள் சேலைதான் உடுத்த வேண்டும். நைட்டி உடுத்தக்கூடாது. சுடிதார் போடக்கூடாது. இத்தனை படித்தும் ஏன் இப்படி கட்டுப்பெட்டியாக இருக்கிறான் என்பதை அவளால் புரிந்துகொள்ளவே முடியவில்லை.
இதை எல்லாம் அவள் தாயிடம் கூட கூற முடியாது. மாப்பிள்ளை சொல்வது சரிதானே? என்று அன்னையும் அவனுக்கு சாதகமாகப் பேசுவாள் என்று அவளுக்குத் தெரியும்.
திருமணத்திற்குப் பின் பெண்கள் புடவை அணிவதுதானே இயல்பு. அதை மாப்பிள்ளை சொன்னால் என்ன தவறு என்று அவளையே அவளுடைய அன்னை கண்டிக்கக்கூடும்.
அவள் அவளுடைய ஹோட்டலுக்கும் போகவில்லை.
ஏற்கனவே வளர்மதி ஒரு பத்து நாட்களுக்கு அவள் வேலைக்குச் செல்ல வேண்டாம் என்றிருந்தாள். அதனால் அவள் வீட்டிலேயே தங்க வேண்டியதாகிவிட்டது.
ஆனால் அவன் தன்னுடைய பணியை தொடர்ந்து செய்தான். அவர்கள் வீட்டிற்கு வந்த மறுநாளே அவன் தன்னுடைய மருத்துவமனைக்குக் கிளம்பிவிட்டான்.