இவனை விட குறைவாக சம்பளம் வாங்குகிறவர்கள் எல்லாம் வீட்டிற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கமலா இருக்கிறார்கள். இவன் இத்தனை நாட்கள் தனியாக இருந்தான். இப்போது திருமணம் ஆகிவிட்டது. இப்போதாவது வாங்கி வைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதா?
இதுவே வீட்டில் பெரியவர்கள் இருந்திருந்தால் அவனிடம் எடுத்துச் சொல்லியிருப்பார்கள். தான்தோன்றித்தனமாக வளர்ந்தவனாயிற்றே. எல்லாம் தனக்குத் தெரியும் என்ற மனப்பான்மையுடன் இருப்பவனிடம் என்ன எதிர்பார்ப்பது?
செய்வதற்கு ஒன்றுமில்லாததால் நேரத்தை தூங்கிக் கழித்தாள். அதற்கும் திட்டு வாங்கினாள்.
அன்று அவன் மதிய நேரமே வந்துவிட்டான். அவளுக்கு உண்ணக் கூட பிடிக்காமல் உறங்கியிருந்தாள். அழைப்பு மணி நீண்ட நேரம் ஒலிக்கவே அப்படியே எழுந்து சென்று கதவைத் திறந்துவிட்டாள்.
அவனை அந்த நேரத்தில் எதிர்பார்த்திருக்கவில்லை.
“என்ன இவ்வளவு நேரம் கதவைத் திறக்க?” என்றான் அதட்டலாய்.
“தூங்கிட்டேன்.” என்றவள் அதற்கு மேல் பேசாமல் உள்ளே சென்றாள்.
“என்ன இந்த நேரத்தில் தூக்கம். அதுவும் இப்படியா தூங்குவே?” என்று கடிந்தான்.
“வேற என்ன பண்றது?”
“செய்யறதுக்கு வேலை வேணும்னு கேட்க வேண்டியதுதானே?”
“நான் ஹோட்டலுக்குப் போறேன்” என்றாள்.
“அதைப் பிறகு பார்க்கலாம். வா சாப்பிடலாம்.”
தான் சாப்பிடவில்லை என்று அவனுக்கு எப்படி தெரியும்?
அவள் விழித்தாள்.
“அதான் வீங்கிப்போன உன் முகமே நீ ரொம்ப நேரமா தூங்கறேன்னு சொல்லுதே. வா சாப்பிடலாம்.”
“இல்லை. நான் அப்புறமா சாப்பிட்டுக்கிறேன்.”
“நான் சொல்றதைக் கேட்கனும்னு ஏற்கனவே சொல்லிட்டேன். நான் குளிச்சுட்டு வர்றதுக்குள்ளே எல்லாத்தையும் எடுத்து வை.” என்று கட்டளையிட்டுவிட்டு அவன் குளியல் அறைக்குள் புகுந்தான்.
அவள் திருமணத்திற்குப் பிறகு இங்கே வந்ததில் இருந்தே அவன் வீட்டில் உணவருந்தும் நேரம் இருவரும் சேர்ந்தேதான் உணவருந்துவர்.
ஆரம்பத்தில் அவள் அவனோடு உணவருந்த மறுத்தாலும், அதற்கு அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ந்துபோனாள்.
“என்ன பிடிக்காத புருசன்னு சாப்பாட்டில் விசம் கலந்துட்டியா?”