அதுலயும் ஒரு பெரிய காரணம் இருக்கு மல்லிகா. அதற்கான விளக்கம் நீ தெரிஞ்சுக்க வேண்டாத விஷயம். நல்ல பொண்ணா குடும்பத்தை பார்த்தியா... அம்மாவா நல்ல மனைவியா டாக்டரா வேலையை செய்தியா... சத்யா கூட என்ஜாய் பண்ணியா. நிம்மதியா சாப்பிட்டியா நிம்மதியா தூங்குனியா உன்னோட ஹெல்த்தை கவனித்தாயா அதோடு விட்டு விடு. தேவையில்லாமல் ரொம்ப யோசிக்காதே புரிஞ்சுதா என்று கடுகடுவென்று பேசி விட்டு ஒரு நொடியில் முகத்தை சட்டென்று மாற்றி விட்டான்.. அப்புறம் நம்ம பொண்ணு எப்படி இருக்கா பேசுனியா என்று முகம் மலர்ந்த சிரிப்புடன் கேட்டான்.
பேசினா... எம்பிபிஎஸ் முடிச்சதும் சைல்ட் ஸ்பெஷலிஸ்ட் ஆகனுமாம்... அது தான் அவளோட லட்சியமாம் என்று சற்று அலட்சியமாக கூறியவள் அனைத்தையும் மனதிற்குள் மறைத்து விட்டு அவளுக்கு இது தானா வந்த ஆர்வமா... இல்லை யாரும் ஏற்படுத்திவிட்டதால் வந்ததா சத்யா.
என்ன மல்லி நீ... என் பொண்ணும் என் பையனும் எம்பிபிஎஸ் படிக்கணும்னு ஆசை படுவது மட்டும் தான் நான். இந்த ஸ்பெஷலிஸ்ட் ஆர்வம் எல்லாம் தானா வந்தது என்று அவள் கன்னத்தை மெதுவாக வருடினான்.
பையன் கார்டியாலஜிஸ்ட்டாவும் பொண்ணு சைல்ட் ஸ்பெஷலிஸ்ட்டாவும் மாறுவது அவங்க அவங்களோட விருப்பம் .இதுல நான் எதுவும் பண்ணல... என்னை நம்பு மல்லி என்று சொல்லி கொண்டே அவள் பக்கத்தில் சென்றவனை தள்ளி விட்டு என்னமோ பண்ணுங்க சத்யா. நான் இப்போது தூங்குறேன் என்று சொல்லி மீண்டும் போர்த்திக் கொண்டு படுத்துக் கொண்டாள் மல்லி.
ஆனால் அவள் மனம் மட்டும் நாம செய்யறது தப்பு என்று மீண்டும் மீண்டும் அவளையே எச்சரித்து கொண்டிருந்தது.
மணி 4 என்று காட்டியது. சத்யா தன் லேப்டாப்பில் எதையோ தேடிக்கொண்டிருந்தான். ஆனால் அவன் மனம் அண்ணன் சொன்ன கோட்வேர்டை யோசித்துக் கொண்டிருந்தது. 3818 இதில் 38 என்பது அவன் வீட்டிலிருந்து ஒரு முக்கால் மணி நேர பயண தூரத்தில் உள்ள ஒரு இடத்தை குறிப்பது என்று அவனுக்கு தெளிவாக புரிந்தது. ஆனால் இந்த 18 என்பதை எதைக் குறிக்கிறது என்று அவன் யோசித்துக் கொண்டே இருக்க சற்று நேரம் யோசனைக்கு பிறகு அவனுக்கு தெளிவாக புரிந்தது. அவர் குறிப்பிட்டது நிச்சயம் மணியாக தான் இருக்கும் 18 என்றால் 6 மணியை குறிக்கிறது அப்போ சாயந்திரம் 6 மணியை குறிப்பிட்டாரா என்று அவன் யோசிக்க இல்லை... அதை எதிர்மறையாக குறிப்பிட்டிருக்கிறார். 18 என்பது ரயில்வே மணி நேரம் அதாவது சாயந்திரம் 6 மணிக்கு இருக்கிறது. அப்போது அதன் எதிர்ப்பதம் காலை.