தொடர்கதை - நீயாக நான்!...நானாக நீ - 01 - முகில் தினகரன்
கோவை ரேஸ் கோர்ஸ் ஏரியா. நகரின் சுத்தத்திற்கு உதாரணமாய்த் திகழும் அந்தக் குடியிருப்புப் பகுதி மொத்தமாய் மேல்தட்டு மக்களின் வாசஸ்தலம். வரிசையாய் பங்களாக்கள்.
ஒவ்வொரு பங்களாவின் முகப்பிலும் தூங்கி வழியும் வாட்ச்மேன்கள். சில பங்களாக்களில் யூனிஃபார்ம் அணிந்த இளம் வயது காவலாளிகள். பல வீடுகளில் யூனிஃபார்ம் இல்லாமல் தலைக்குக் குல்லா மட்டும் அணிந்திருக்கும் வயதான காவலாளிகள்.
அதிகாலையின் இதமான குளிர் காற்று இளையராஜாவின் இசை போல் இதயம் தொட்டு வருடியது.
“காவியம் பாட வா தென்றலே!..புது மலர் பூத்திடும் வேளை....இனிதான பொழுது எனதாகுமோ?...புரியாத புதிர்தான் எதிர்காலமோ?” எங்கிருந்தோ வந்த பாட்டுச் சத்தம் குருதி நாளங்களில் சுருதி சேர்த்தன.
நெரிசலில்லா சாலையில் வாய் வழியே மூச்சு விட்டுக் கொண்டே வாக்கிங் சென்று கொண்டிருந்தது பருத்தோர் கூட்டம். நின்ற இடத்திலேயே நின்று உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தது இளையோர் கூட்டம்.
அடுத்த வருட ஆணழகன் போட்டியில் வென்றே தீருவது என்கிற வெறியுடன் சில இளைஞர்கள் ஆவேசமாய் எக்சர்ஸைஸ் செய்து கொண்டிருந்தனர்.
சுக்குக் காபி விற்பவர்களும் அருகம்புல் ஜூஸ் விற்பவர்களும் சுறுசுறுப்பாகினர். அவர்களது கல்லா களை கட்டத் துவங்கியிருந்தது.
பள்ளி ஆட்டோ ஒன்று அந்த நேரத்திலேயே சில யூனிஃபார்ம் வாண்டுகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்தது. வெளியே எட்டிப்பார்த்து “ததக்கா...புதக்கா” என்று நடந்து செல்லும் தொப்பை மனிதர்களைக் காட்டிச் சிரித்துக் கொண்டே சென்ற அந்த வாண்டுகளை எரிச்சலுடன் பார்த்தனர் பெரிசுகள்.
இரண்டு பெருசுகள் ஓய்ந்து போய் சாலையோர மரத்தடி பெஞ்சில் உட்கார்ந்து செய்தித்தாளை மேய்ந்தன.
“கர்மம்...கர்மம்! படத்துக்கு பேர் வெச்சிருக்கானுக பாருங்க! “துண்டுபீடி”ன்னு...த்தூ! வேற பேரே கிடைக்கலையா இவனுகளுக்கு?” செய்தித்தாளில் வந்திருந்த சினிமா விளம்பரத்தைப் பார்த்து விட்டு ஒரு பெருசு புலம்ப
“என்னது.. “துண்டு பீடி”ன்னு ஒரு படமா?..காலக் கொடுமை!.....ஹூம்...அந்தக் காலத்திலும் படத்துக்குப் பேர் வெச்சாங்க...எப்படி?...“மணாளனே மங்கையின் பாக்கியம்!”..“தாய்ச் சொல்லைத் தட்டாதே!”ன்னு!” இன்னொரு பெருசு தன் பிலாக்கணத்தைத்