(Reading time: 27 - 53 minutes)

வன் சென்றவுடன், சக்தி இதுக்கு மேல கிழிய என்ன இருக்கு என்றவாறு பரிதாபமாக சந்தியாவை பார்க்க,

“வாங்க மேடம்.....உங்க பிரண்ட் கிளாஸ் லேட் ஆகிடுச்சுன்னு ரெம்ப பீல் பண்றாரு..வாங்க” என்று சொல்லிவிட்டு அவள் முன்னே நடக்க அவள் பின்னாடியே வேகமாக நடந்த சக்தி,

“சாரி ஜந்து...நம்புடி என்னை” என்றாள் படபடப்பாக.

“உன்னை நம்பாம எப்படி இருப்பேன்...கல்யாணமாக போகுது. ஜாயின்ட் பாமிலி வேற. கார்த்திக் மாதிரி எத்தனை சகுனி இருப்பாங்க. இவனாவது என்னை பத்தி தெரிஞ்சிக்க வந்தான். அவனை நான் சமாளிச்சிடுவேன். ஆனா உனக்கு அப்படி இல்லடி. உன்கிட்ட அழகா போட்டு வாங்கி உன் தலையில மிளகா அரச்சிடுவங்க...” என சந்தியா இலவச அறிவுரை வழங்கினாள் தோழிக்கு. அவளே ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறாள் என்பதை அறியாமல்.

“சரிடி இனிமே கவனமா இருக்கேன்” என்றாள் சக்தி பவ்யமாக.

“இனிமே இரு. ஆனா நேத்து கவனமா இருக்காததுக்கு இன்னைக்கு பனிஷ்மென்ட் கண்டிப்பா இருக்கு” என்று சக்திக்கு அதிர்ச்சியூட்டி சென்றாள்.

ன்றும் யோகா வகுப்பில் முக்கிய பயிற்சிகள் முடிந்து முந்தைய நாள் சந்தியா வந்த நேரம் நடந்த ‘இமேஜரி’ யை துவங்கி இருந்தார் யோகா ஆசிரியர். பயிற்சி எடுக்க வந்தவர்கள் அனைவரும் கை கால்களை தளர்த்தி கண்களை மூடி தியானத்தில் இருக்க, வழக்கம் போல  யோகா ஆசிரியர் தனது பேச்சால் அவர்களின் மனக்கண்ணில் கற்பனையை விதைத்துக் கொண்டிருந்தார். அவர் “நீங்க இப்போ கடற்கரைல  நின்னுக்கிட்டு இருக்கிறீங்க.”  என சொல்லிக் கொண்டிருக்கும்  போது படுத்தவாறே சந்தியா லேசாக சக்தியின் கையை சுரண்டினாள்.  “பச்ச் என்ன?" கேட்டாள் சக்தி ரகசியமாக.   “சும்மா” என்று இரகசியமாக பதிலளித்தாள்  லேசாக சிரித்தபடி. ஆசிரியர் உரையை தொடரும் போது சக்தியை சந்தியா சுரண்டுவதும் பின் சும்மா என சொல்வதும் இரண்டு முறை தொடர்ந்தது.  ஆசிரியர் “அப்பொழுது தூரத்தில் ஒரு சத்தம்” என சொல்லும் போது  நிஜமாகவே “ஆ..........ப  ...ப....”வீரிட்டு  எழுந்த சக்தி குதித்தாள் ….அவள் கதற....பக்கத்தில் உள்ளவர்களும் சிலர் கதறி ஓட... பலர் சிதறி ஓட.... “ப.. ப .பன்னா...பாம்ம்பா சக்தி” என ஒன்றும் தெரியாதது போல சந்தியா கேட்க சுற்றி இருந்தவர்களிடம் காட்டுத்தீ போல சக்தியின் ப ….ப.. என்பது பாம்பாக உருமாறி அனைவரும் அந்த அறையை விட்டு ஓட, சக்தியும் சந்தியாவும் அவர்களுடன் சேர்ந்து ஓட....அந்த அறையில் எஞ்சியது அத்தனை பேர் மிதியையும் தாங்கிய ரப்பர் பல்லி மட்டும் தான்.....

விசாரணை கமிஷன் வைத்து விசாரிக்காதது தான் குறை. வழக்கம் போல சந்தியா எதிலும் மாட்டவில்லை. சக்தியை மட்டும் “இப்படி ஒரு ரப்பர் பல்லியை பாத்து பாம்புன்னு சொல்லி எல்லாரையும் பயமுறுத்திட்டியே....உனக்கு இஷ்டமில்லைன்னா யாரு இங்க வரச் சொன்னது” என யோகா ஆசிரியர்  எரிச்சலுடன் சொன்னார்.  பின், அவளுக்கு சில அறிவுரைகளை வழங்கி அனுப்பி வைத்தார். அழுது விடுவது போல முகத்தை வைத்துக் கொண்டு வெளியே வந்த சக்தியை உற்றுப் பார்த்த படி, “செம பீலிங்ஸ் காட்டுற ...சும்மா நெஞ்ச தொட்டுட்டாங்க யோகா மேம்...இல்லடி சக்கு.” என சந்தியா சிரிக்க, சக்திக்கு அந்த கோபத்திலும் அவள் சொன்ன விதத்தில் சிரிப்பு வர    “ராட்சஸி...உயிரை எடுக்குறதுக்குன்னே வந்த கொல்லி வாய் பிசாசு...உன்னை” அடிக்க வந்த சக்தியிடம் இருந்து சந்தியா ஓட முயலும் போது அவள் கால் பிசகி கொள்ள “ஸ்....ப்பா ...முருகா...” என கத்தியபடியே சுருண்டு உட்கார்ந்தாள். சக்தியோ கொஞ்சம் கூட பதறாமல், “பல்லியை வைத்த வில்லியே.....கடவுளின் விளையாட்டை பார்த்தாயா ? அனைவரையும் ஓடவிட்ட உன்னை  காலை ஒடித்து உட்கார வைத்து விட்டாரே ..ஹ..ஹ” என சிரித்தாள்.  “நான் வலில துடிக்கிறேன்..என்ன சிரிப்புடி உனக்கு” என சந்தியா திட்ட “நீ தானடி சொல்லுவ...இடுக்கண் வருங்கால் நகுகன்னு... நீ அழுகிறத  பாத்து நான் அழுது என் சோகம் உன்னை தாக்கிடுச்சுன்னா..அதான் சிரிக்கிறேன்....நண்பிடி..”  என இது தான் தக்க சமயம் என கிண்டலடித்து பழி தீர்த்தாள்.

அப்பொழுது அங்கே பர்தா போட்ட ஒருவர் “என்ன ஆச்சு?” என பதறிய படி ஓடி வந்தார்... அந்த குரல் கேட்டு  கார்த்திக் தான் மாறு வேஷத்தில் வந்து இருக்கிறான் என அடையாளம் கண்டு கொண்டனர் சக்தியும், சந்தியாவும். அவன் வேஷத்தை பார்த்ததும் சந்தியாவுக்கு வலி மறந்து போய் சிரிப்பும் வியப்பும் வந்தது. “ம்...குழந்தை அழுகுது” என்றாள் சக்தி.. “மை பேப்...ஈ   எதுக்கு அழுகுது”  என கார்த்திக் சந்தியாவை பார்த்து  வினவிய படியே  அவளருகில் முட்டி போட்ட படி அமர ,

 “ஐ அம் நாட் யுவர் பேபி...” - சந்தியா சிலிர்ப்புடன்.

“குழந்தைன்னா...பேபி தான...சக்தி  மட்டும் சொல்லலாம் நான் சொல்லக்கூடாதா?” - கார்த்திக் சொல்லியவாறு பர்தா உடையின் முகத்திரையை மேலே தூக்கினான்....

“ஆரம்பிச்சிடாங்கடா... இவங்க வம்புல சிக்கிடவே கூடாது...பேசாம டைவர்ட் பண்ண வேண்டியது தான் ” மனதிற்குள் உறுதி பூண்டாள் சக்தி.

சக்தி, “இது என்ன வேஷம் கார்த்திக்? காமெடி பீஸ்ஸாட்டம்” என அவனிடம் கேட்க, “என் பேபி வலி பொறுக்காம துடிக்கிறா இப்போ இது தான் முக்கியமா?” என சக்திக்கு பதிலளித்து விட்டு சந்தியாவிடம் “எந்த காலு காமி...ஸ்ப்ரைன்னா இல்ல ப்ராக்ச்ச்ரா பாப்போம்” என அவள் காலை தொட வந்தவனிடமிருந்து அவளால் முடிந்தவரை  காலை விலக்க முற்பட்டவளை பார்த்து அவனுக்கு கோபம் வந்து  விருட்டென எழ,  அவனை  அண்ணாந்து பார்த்தவளாய், “ஹே....அங்க்ரி பர்ட்...உங்க  கெட்டப் வேஸ்ட் ஆகாத படி என்னை வீட்டில  ட்ராப் பண்ணிடுறீங்களா? ரெம்ப வலிக்குது” என கண்களை  சுருக்கி கெஞ்சலாக கேட்டாள்.  அவள் கேட்டதும், முகத்தை திருப்பிக் கொண்டு “பைக் வரைக்கும் எப்படி நடப்ப?  என்னையும் தொட விட மாட்ட..சக்தி கூட ஆட்டோல அனுப்பிச்சு விடுறேன்” என அவன் சொல்ல, “எனக்கு வெறும் சுளுக்கு தான். நொண்டி நொண்டி வந்துடுவேனாக்கும்...”  என வீராப்பாக சொல்லிவிட்டு தட்டுத்தடுமாறி எழுந்தாள். சக்தியின் உதவியுடன்  ஸ்கூட்டியில் கார்த்திக்கின் பின் லேசாக முனங்கிய படியே  ஒரு பக்கமாக கால் போட்டு உட்கார்ந்தவள்,  “கார்த்திக், இது தான் சாக்குன்னு கண்ட படி ஓட்டக் கூடாது” என ஆணை பிறப்பிக்க, வேண்டுமென்றே கட்டை வண்டி போல அவன் ஓட்ட, சில நொடிகளில் கடுப்பான சந்தியா “என்ன கார்த்திக், நடந்து போறவன் கூட ஓவர் டேக் பண்ணிட்டு போறான்.” என சலித்துக் கொண்டாள்.

கார்த்திக், “ பாஸ்ட்டா போனா அடிக்கடி ப்ரேக் போட வேண்டி வரும் ...என்னை திட்டுவ ” என சொல்ல “அய்யோ  ...வேகமா போங்க..” என ஒப்புதல் அளிக்கவும் ஸ்கூட்டியின் வேகம் கூடியது.

“எங்க போறீங்க கார்த்திக்? எங்க வீடு இந்த பக்கம் கிடையாது” என அவள் சொல்ல, “ஆள் நடமாட்டமே இல்லாத ஒரு பாழடஞ்ச பில்டிங் இருக்கு. அங்க கூட்டிகிட்டு போய் உன்னை.... ” என இழுத்தவனை “காமெடி பண்ணாதீங்க பாஸ்...நீங்க பழுத்த பழனியப்பா. இந்த வில்லன் டயலாக் எல்லாம் வொர்க் அவுட் ஆகாது” என அவள் கிண்டலடிக்க அவனோ சிறிது நேரத்தில் நிஜமாகவே ஒரு பாழடைந்த கட்டிடத்தின் அருகே வண்டியை நிறுத்தினான்.

அவளை ஸ்கூட்டியிலேயே இருக்க சொல்லி விட்டு அவன் மட்டும் இறங்கி ஸ்டேன்ட்டை போட்டவன், “சூப்பர் வள்ளிக்கண்ணு....உன்னால நடக்க கூட  முடியாது....எனக்கு வேலை ரெம்ப ஈஸி”. என்று சொல்லிக் கொண்டே விறு விறுவென அவன் போட்டிருந்த பர்தா அங்கியை கழட்ட, சந்தியாவிற்கு லேசாக பயம் மனதில் துளிர் விட, அதை மறைக்க முயன்றவளாய்  “பாஸ் இங்க எதுக்கு கூட்டிகிட்டு வந்து இருக்கீங்க” என கண்களில் மிரட்சியுடன் கேட்க, காரை திறந்து வைத்து விட்டு அவளின் எதிரே வந்து நின்றான். அவளின் முகத்தருகே முகத்தை வைத்து நேருக்கு நேர் பார்த்தவனை விட்டு விலகியோட முடியாதபடி, அவளின்  இருபுறமும் கைகளால்  வண்டியின் இருக்கையை பிடித்தவாறு வேலி அமைத்து அவளை தொடாமலே கைதியாக்கினான். அவனின் அருகாமையில் படபடத்த அவள் நெஞ்சம், அப்படியே எகிறி வெளியே குதித்து தன் உணர்வுகளை காட்டி கொடுத்து விடுமோ என்ற அச்சத்தில் வலியை கூட மறந்து விட்டாள். “நான் பழுத்த பழனியப்பான்னு சொன்ன தான?...” என்றவனின் பார்வை வீச்சைத் தாங்க முடியாமல் அவள் தடுமாறிய  அந்த கணத்தில்  அவளை குண்டுகட்டாக தூக்கி “...பிவ்டி கேஜி தாஜ்மகால் எனக்கே எனக்கா” என பாடிக்கொண்டே  அவர்கள் அருகிலே நின்று கொண்டிருந்த  இருந்த காரின் முன் மெதுவாக இறக்கினான். அதன் பின்னரும் அவளை தாங்கி பிடித்திருந்த அவன் கரத்தை தட்டி விட்டு பிடிமானத்திற்கு  காரில் சாய்ந்து கொண்டு  முறைத்தவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே, “மறுபடியும் தூக்கி உட்கார வைச்சா தான் காருக்குள்ள உட்காருவீங்களா?” என கிண்டலாக கேட்க, அவளோ “நான் உங்களை தூக்க சொன்னேன்னா... கஷ்டப்பட்டுனாலும் மெதுவா நானே நடந்து வந்திருப்பேன்”  என முகத்தை சுளித்துக் கொண்டு எரிச்சல் பட்டாள்.

கார்த்திக்கிற்கு சுர்ரென கோபத்தில் முகம் சுண்ட  மறுபடியும் அவளை அள்ளிக் கொண்டு போய் ஸ்கூட்டியில் உட்கார வைத்தான். பின் “நீயே கஷ்டப்பட்டு மெதுவா நடந்து வாம்மா. நான் காருல வெயிட் பண்றேன்” என்று விட்டு காரில் ஏறினான். அதை எதிர்ப்பர்க்காமல் மிரட்சியாக அவனைப் பார்த்த படியே சந்தியா ஸ்கூட்டியைப் பிடித்துக் கொண்டு   இரண்டு எட்டுக்கள் வைத்து விட்டு மேலே எட்டு வைக்க பிடிமானம் இல்லாமல் நொண்டி அடித்து கொண்டிருந்தாள். அதை பார்த்து அவன் லேசாக சிரித்தபடி  

“யப்பா.....மிடில் கிளாஸ்ல பொறந்தாலும்  கொஞ்சம் கூட வளைஞ்சு கொடுக்காம என்ன திமிர்....இவள எப்ப அடக்கி, எப்போ பை பை சொல்ல....பொறுமைய ரெம்ப சோதிக்கிறியே .....அழகா வேற இருந்து இம்சிக்கிற......ஜூன் 4 குள்ள உன் கதைய  முடிக்கிறேன் பேயே....அதுவரைக்கும் எவ்வளோ ஆடணுமோ ஆடிக்கோ ...அதுக்கப்புறம் ஏன்டா இவன்கிட்ட வம்பு பண்ணோம்ன்னு ரெம்ப பீல் பண்ணுவ” என எண்ணிக் கொண்டே காரை முடிந்தளவுக்கு அவள் அருகில் கொண்டு வந்து திறந்து விட, சிரமப்பட்டு இரண்டு எட்டுக்களில் தாவி காரில் ஏறிக்கொண்டாள்.

“ஸ் ப்பா … இப்போ கால் ரெம்ப வலிக்குது. பட்ட பிறகு தான் தெரியுது பாஸ்....நான் தான் உங்களை தப்பா நினச்சுட்டேன்...இருந்தாலும் கார்க்கு பக்கத்திலே பைக்கை நிறுத்தி இருந்தா இவ்ளோ கஷ்டப்படத்  தேவயில்லை” என்று அலுத்துக் கொண்டவளை, ஒரு வெற்றுப் பார்வை பார்த்துவிட்டு தலையாட்டலோடு உதட்டை சுழித்தான். பின் பெருமூச்சு விட்டவன், “வேணும்னே பைக்கை தள்ளி நிப்பாட்டி வச்சுட்டேன்னு இப்பவும்   என்னைப் பத்தி தப்பாத் தான் யோசிக்கிற சந்தியா” என உணர்ச்சியற்ற குரலில் சொல்லி விட்டு, காரை இயக்க, “கமான் கார்த்திக். பழச பத்தி பேசாம சியர் அப் அண்ட் பி ஹாப்பி” என்றாள் வலியை வெளிக்காட்டாமல் சிரித்த படி. அதை பார்த்து அவனுக்கும்  உற்சாகம் பிறக்க, “அப் கோர்ஸ்...இன்னைக்கு உனக்கு ரெண்டு  சர்ப்ரைஸ்” என்று சொல்லி விட்டு  காரை செலுத்தினான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.