(Reading time: 27 - 53 minutes)

வனது வீட்டை நெருங்கும் சமயம் “என்ன பாஸ் யோகா க்ளாஸ்க்கே மறுபடியும் கூட்டிட்டு போறீங்க” என கேட்க, “எக்ஸ்ஸாக்ட்டா அங்க இல்ல சந்தியா...ஆனா அது பக்கத்தில தான்..அது தான் சர்ப்ரைஸ்” என பீடிகை போட்டான். “அப்புறம் எதுக்கு பாஸ் அந்த பாழடைஞ்ச பில்டிங்க்கு கூட்டிகிட்டுப் போனீங்க?“ என சந்தியா கேட்க ,

“உன் கூட பைக்ல வர கண்டிஷன் போட்ட.  அதான் யாருக்கும் தெரியாம எங்க பழைய பாக்டரி குடோன்ல  காரை நிப்பாட்டிட்டு பர்தால வந்தேன். இப்போ எங்க வந்துருக்கோம்ன்னு தெரியுதா?” என்றான் கார்த்திக் காரை நிறுத்தியபடி.  அவன் சொன்னதும் வீட்டை ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தவள்  “அட பேய் பங்களா.” என  சொல்ல, அவன் சிரித்து விட்டு “எங்க வீடு உனக்கு பேய் பங்களா மாதிரி இருக்கா?  பிரிட்டிஷ்காரன் காலத்தில கட்டினது. இதை டிசைன் பண்ணதே ஒரு பிரிட்டிஷ் ஆர்கிடெக்ட். இத்தனை வருஷமா பத்திரமா மையின்டயின் பண்ணிக்கிட்டு வர்றோம். அந்த காலத்து பில்டிங் தான். ஆனா காண்டம்ரரி லுக்கோட ரொம்ப நல்லா இருக்கும். நீ ஆர்ட்டிஸ்ட் தான, உனக்கு கண்டிப்பா பிடிக்கும். நீ இங்கே  இரு. உள்ள போய் அண்ணி, மது யாரையாவது உன்னை கூட்டிட்டு வரச் சொல்றேன்” என்று உள்ளே சென்றான். காரில் காத்திருந்த நேரம் ஜன்னல் வழியாக சுற்றும் முற்றும் பார்க்கும் போதே செல்வ வளம் கண் கூடாக தெரிந்தது. மனம் மறுபடியும் அவளுக்கு ஏனோ எச்சரிக்கை மணி அடித்தது.

“இது பணக்கார ஏரியான்னு தெரியும்....ஆனா கார்த்திக் வீடு இங்க தான் இருக்குன்னு இப்போ தான தெரியும் ...எவ்வளோ பெரிய வீடு!!!!...நம்ம தெருவையே நகட்டி கொண்டு வந்து வச்சிடலாம் போல... பெரிய தோட்டம்... ஆர்ம்ஸ் பௌண்ட்டேஷன்க்கு இப்படி ஒரு இடம் சென்னைல கிடச்சா, இந்த மாதிரியே தோட்டம் எல்லாம் வச்சு கலக்கணும்.... கனவு இருக்கு. காசு இல்லையே......முருகா காலாகாலத்துல ஒரு நல்ல நோட்டு அச்சடிக்கிற மெஷினை அப்படியே பார்சல் பண்ணிடு.....கப்புன்னு பிடிச்சி அப்படியே நோட்டை அடிச்சிக்கிறேன்” என மனதிற்குள்  முருகனிடம் மானசீகமாக வில்லங்கமான வேண்டுதலை வைத்தாள்.

அவளின் யோகா வகுப்பிற்கு இரண்டு மூன்று வீடுகள் தள்ளி தான் கார்த்திக் வீடு இருந்தது. முந்தைய நாள் காலை கார்த்திக் நடைப் பயிற்சி முடித்து  விட்டு வீடு திரும்பும் போது அவனை ஏவுகணை வேகத்தில் கடந்த சந்தியாவை பார்த்து விட்டான்....அதன் தொடர்ச்சியாக தான் இவ்வளவும்...

சில நொடிகளில் மீரா, மது மட்டும் அல்ல ஒரு கும்பலே அங்கு வந்து நின்றது. கார்த்திக் வீடு சற்று உயர்த்தி கட்டப்பட்டிருந்தது. அவர்கள் வீட்டு வாயிலை அடைய சந்தியாவிற்கு நிறைய படிகள் ஏற வேண்டியிருந்தது. மீரா, மது உதவியுடன் சந்தியா தட்டு தடுமாறி ஏறி ஒரு வழியாக வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்தாள். “பரவாயில்லை, இடது கால்ல அடிபட்டிருக்கு. வலது காலை எடுத்து வைத்து வா வா ன்னு பாட அவசியமே  இல்ல“ என்று மீரா சன்னமான குரலில் அவளிடம் சொல்லும் போதே,

“ஹாய் சந்து சித்தி” சொல்லிக் கொண்டு ஓடி வந்து அவள் கையை பிடித்தனர்  நித்தி, நிக்கி.

“நாம ப்ரண்ட்ஸ்...கால் மீ சந்து” என்றாள் சந்தியா.

“ஏன் அர்விந்தும் யாழுவும் உன்னை  சித்தின்னு கூப்பிடுறாங்க. அவங்க உனக்கு ப்ரண்ட்ஸ் இல்லையா” என ஆங்கிலத்தில் கேட்ட நித்திக்கு பதில் சொல்ல திணறினாள் சந்தியா. “மது சித்தி, அபி சித்தி, நீ சந்து சித்தி” என மழலையில் மொழிந்தாள் நிக்கி.

அதை கவனித்த சௌபர்ணிகா, “நித்தி, நிக்கி வாங்க இந்த பக்கம்.” என அழைக்க, அவர் சத்தத்தை கேட்டதும்  சட்டென பேசுவதை நிறுத்தி விட்டு, இருவரும் மீராவிடம் பம்ம, அருகில் நின்ற  சூர்யா அவர்களை இரு தோள்களிலும் தூக்கிக் கொண்டான்.  பின் அவன் மீராவிடம் “மீரா, சந்தியாவை அந்த கவுச்ல உட்கார வைச்சு,  அடிப்பட்ட காலை நீட்ட சொல்லி பாதத்தை நல்லா ஏந்தலா வை.” என சொல்ல மதுவின் உதவியுடன் சந்தியா சோபாவில் உட்கார்ந்து ஒரு உயரமான நாற்காலி மீது காலை ஏந்தலாக வைத்தாள்.

கார்த்திக்கிடம்  ஐஸ் பேக்கை எடுத்து வர சொல்லி விட்டு, சந்தியாவின் இடது கால் பாதத்தில் அடிபட்டிருந்ததை  பரிசோதித்த சூர்யா, நல்லா வீக்கம் இருக்கு. ஆங்கிள் ஸ்ப்ரைன்னா தான் இருக்கும். கண்டிப்பா எக்ஸ் ரே எடுக்கணும். அப்போ தான் லிகமென்ட் ல டியர் இருக்கான்னு தெரியும். எப்படி இவ்வளோ நேரம் வலியை தாங்கிட்டு இருக்க? “ என்று அவளிடம் கேட்டு விட்டு  வலி நிவாரணி மாத்திரயை  மீராவிடம் அவளுக்கு எடுத்து கொடுக்க சொல்ல, “சூர்யா, அவ எதுவும் சாப்பிட்டு இருக்க மாட்டா.” என்று விட்டு, “இந்தா  காபி  குடிச்சிட்டு டேப்லட் போடு” என்று கார்த்திக் காபியை நீட்டினான்.

சந்தியா, “கார்த்திக் பர்ஸ்ட் வீட்டுக்கு கூப்பிட்டு பேசணும். லேட் ஆகிடுச்சுன்னு பயப்படுவாங்க.” என்றவுடன் கார்த்திக் ஸ்ரீ யை அழைத்து விவரத்தை தெரிவித்து விட்டு சந்தியாவிடம் கொடுக்க, அவள்  பேசுவதை வைத்து அவர்கள் வீட்டில் பயந்து போயிருப்பதை அறிந்த சதாசிவம் ,அவளிடம் போன்னை வாங்கி தன்னை அறிமுகம் செய்து விட்டு தன்ராஜிடமும், லஷ்மியிடமும் அவளுக்கு பயப்படும் படி எதுவும் இல்லை என தெளிவு படுத்திய பின் அவர்கள் நிம்மதி அடைந்தனர். பின்னும், அவர்  எவ்வளவு சொல்லியும் கேட்காமல், தன்ராஜ் தானே சந்தியாவை வந்து அழைத்துச் செல்வதாக சொல்லி விட்டார். காலில் மது ஐஸ்கட்டி ஒத்தடம் கொடுக்க, மகாராணி போல சோபாவில் தலை சாய்த்து சந்தியா காபியை பருகி கொண்டிருந்தாள்.

அவள் காபியை குடித்தது தான் தாமதம், சௌபர்ணிகா அவளிடம் “சந்தியா கிளம்பு. பத்து நிமிஷத்தில்  பக்கத்தில உள்ள ஆர்த்தோ கிளினிக்ல அப்பாயின்மென்ட் வாங்கியிருக்கேன். உன்னை காண்பிச்சிட்டு உங்க வீட்டில ட்ராப் பண்ணிடுறேன்“ என அவசரப்படுத்தினாள். சதாசிவம் அவரிடம்  “அவங்க அப்பா அழச்சிட்டு போக வர்றேன்னு சொன்னாரே” என கேட்க, “வந்தா விவரம் சொல்லி அனுப்பி விட்டுடுங்க” என்று மிடுக்காக சொல்லிவிட்டு, கார்த்திக்கிடம் “காதி நீ கைத்தாங்கலா அவளை பிடிச்சு கார் வரைக்கும் வந்து ஏத்திவிட்டுட்டுப் போ. ” என கட்டளையிட, “இல்ல ஆண்ட்டி நான் மது கூட “ என சந்தியா ஆரம்பிக்க “விடிஞ்சிடும் சந்தியா. நீ ஏறி வரவே ரெம்ப சிரமபட்ட. கார்த்திக் ஒரு நிமிஷத்தில உன்னை விச்சுன்னு தூக்கிட்டே வந்துடுவான்.” என்று சொல்லி விட்டு முன்னே நடக்க, அவளின் அருகில் வந்தவனிடம் “கரும்பு தின்ன கூலியா வேணும்? இப்போ ரெம்ப சந்தோஷமா இருக்குமே” என அவள் கண்களால் பேச,

“எஸ் மை பேபி...இ இட் இஸ் மை ப்ளஷர்” என்று கண்களாளே  பதிலடி கொடுத்த படி அவள் அருகில் வர,

இவர்கள் இருவரும் கண்களால் பேசிக் கொள்வதை கவனித்த மீரா, “காதி,  உன்னை சுத்தி நம்ம குடும்பமே இருக்கு....எங்களை யாராவது தெரியுதா உனக்கு  .. ” என மீரா கிண்டலடிக்க,

“அப்படியா....இவங்களெல்லாம் யாரு? சந்தியா உனக்கு தெரியுமா?” என கார்த்திக் சந்தியாவிடம் கேட்க,

“அவங்க தெரியுதோ...இல்லையோ முன்னாடி போற ஆண்ட்டி நல்லா தெரியுது. நான் வேணா கூப்பி்டட்டா” என சந்தியா அவனை மாட்டி விடும் நல்ல எண்ணத்தில் கேட்க,

“காதி சீக்கிரமா போ...அப்புறம் உங்க அம்மா டிரைவர் அனுப்பி  அவளை கூப்பிட்டு வர சொல்லிடுவா” என சதாசிவம் மகனுக்கு எச்சரிப்பது போல உதவி செய்தார்.

“தேங்க்ஸ் பார் ரிமைண்டிங் மீ டாட்” என்று சதாசிவத்திடம் நன்றி கூறி விட்டு, சந்தியாவை பார்க்க, “கார்த்திக் நீங்க எதுவும் செய்ய வேண்டாம். அப்படியே நடந்து வாங்க..உங்க கைய பிடிச்சே நொண்டி அடிச்சிட்டு வந்துடுவேன்...எங்க தெருவில நொண்டி விளாட்டுல நான் ஸ்பெஷலிஸ்ட் ஆக்கும்” என,   தன்னை தானே மெசசிக்க, “இந்தா...” என கையை நீட்டிய கார்த்திக்,  “கையை பிடிச்சிட்டு நொண்டி அடி இல்ல பல்டி அடி. ஆனா  நான் சொல்ற பாட்டை நீ பாடிக்கிட்டே வரணும்“ என கூறிய படியே அவன் நடக்க ஆரம்பிக்க அவன் கைகளை இறுக பற்றிக் கொண்டு நொண்டிய  படியே , “சரி என்ன பாட்டு?” என சந்தியா கேட்க,

“ஆட்டுக்குட்டி முட்டையிட்டு

கோழி குட்டி வந்ததுன்னு

 யானை குஞ்சு சொல்ல கேட்டு

 பூனை குஞ்சு சொன்னதுன்டு

கதையில்ல சாமி

இப்போ காணுது பூமி”

என பாடி விட்டு, “உன்னோட டர்ன், நீ  பாடு” என சொல்ல, “நான் நொண்டி அடிக்கிறது கிண்டலா இருக்கா உங்களுக்கு? எங்கப்பாக்கு சினிமா பாட்டு படிச்சா பிடிக்காது.” என அவள் மழுப்ப, அவன் மீண்டும் வலியுறுத்த ,அவள் பாடி முடித்ததும், “உங்க அப்பா ஏன் பாடக் கூடாதுன்னு சொன்னாருன்னு இப்போ தான் புரியுது வள்ளிக்கண்ணு.... சித்ரவதை பண்றதுக்கு கை வசம் நிறைய திறம வைச்சிருக்க. வெரி குட். கீப் இட் அப்”  என அவள் பாடியதை நக்கலடித்தான்.

“சும்மா இருந்த சிங்கத்தை சொறிஞ்சி விட்டுட்டு இப்படி அசிங்கப் படுத்துனா நல்லாவா இருக்கு....இதுக்காகவே இன்னொரு பாட்டு பாடப் போறேன்” என அவள் மிரட்ட அவனும் பதிலுக்கு அவளை வார, அவள் காரில் ஏறும் வரை உரையாடல் தொடர்ந்தது. அவனுடன்  வாயாடுவதுலே கவனமாக இருந்தவளுக்கு வலி பெரிதாக தெரியவில்லை.

அவளை அனுப்பி விட்டு வீட்டிக்குள் நுழைய விடாமல் அவனை சுற்றி வளைத்தனர் மீராவும், மதுவும். மீரா அவனிடம் “அது எப்படி உன் பேவரட் கலர்ல அவ சுடிதார் போட்டு இருக்கா? உண்மைய  சொல்லு என்ன போய்கிட்டு இருக்கு உங்க ரெண்டு பேருக்குள்ள?” என  கேட்க,

“நத்திங் அண்ணி....ப்ரேக் அப் ஆறதுக்கு லவ் இல்ல …...டேட் பண்றேன் வச்சுக்கோங்களேன். ரொம்ப நாள் இப்படி சுத்த மாட்டேன். இன்னும் 3 வாரம் தான் இந்த இன்ஸ்டன்ட் லவ்க்கு லைப்......இந்த பேய்ய அடக்கணும்ன்னு வெறி மட்டும் தான் எனக்கு இருக்கு  “ என்றான் கார்த்திக்.

மது, “யேய்...காதி அவ நல்ல பொண்ணா  தெரியுறா...அவ லைப்ப கெடுத்துடாத“ என பதறினாள்.

கார்த்திக் “என்ன மொட்டை அவளுக்கு ஜால்ராவா? ஒரே நாள்ல உன்னை மாத்திட்டாளா? இன்னக்கு வரைக்கும் என் டையத்தை எவ்வளோ வீணாக்கி இருக்கா தெரியுமா? முதல் நாள் அர்ஜுன், நேத்து ஆக்ஸிடென்ட், இன்னைக்கு ஸ்பரைன்னு என் நேரத்தை எல்லாம் எவளோ ஒருத்திக்காக ஆதாயம் இல்லாம செலவழிக்க முடியாது  மது.  அவளை எப்படி அப்படியே விட முடியும்? நோ சான்ஸ். அவ விளையாடி நான் எவ்வளோ கஷ்டப்பட்டேனோ அதை விட அவ பல மடங்கு கஷ்டப்படணும்....நான் ஏமாத்துன வலி அவ மனசுல ஆழமா பதியணும். நீ உருகி அவகிட்ட இதை சொல்லி என் மொத்த ப்ளான்னை சொதப்பாம இரு “ என்றான் கார்த்திக்.

அவன் பேசுவதை கேட்டு  துணுக்குற்ற  மீரா   மதுவை   உள்ளே   போக    சொல்லி விட்டு ,  “என்ன   காதி    இது?   இந்தியால இருந்துகிட்டு   அமெரிக்கால  மாதிரி டேட் பண்றேன்னு சொல்ற. இது அவ மட்டும் இல்ல. அவ குடும்பமே சம்பந்தப்பட்ட விஷயம். நீ பழி வாங்கணும்னு நினச்சா அது எல்லாரையும் பாதிக்க வாய்ப்பு இருக்கு. எந்த பாவமும் செய்யாமலே நம்ம வீட்டு பொண்ணுக்கு கல்யாணம் காட்சி செய்து பாக்க முடியலை. இதுல இன்னொரு பொண்ணை கஷ்டபடுத்தி அவ பாவத்தையும் வாங்கி கட்டிக்கணுமா? வேண்டாம் காதி.” என்று எச்சரித்தாள்.

“பொண்ணு பொண்ணுன்னு நீங்களும் மதுவும் சொல்றீங்க. பொண்ணுக்குரிய எந்த குணமாவது அவகிட்ட இருக்கா? எதுலயும் ஒரு அலட்சியம், விளையாட்டு, திமிர், பொய், கேலி, கிண்டல் எல்லாத்துக்கு மேலயும் அவ ஒரு சந்தர்ப்பவாதி. பொண்ணுன்னா ஒவ்வொரு விஷயத்தையும் நிறுத்தி நிதானமா செய்வாங்க. ஆனா இவ பைக் ஓட்டுறதுல இருந்து ப்ராடக்ட்ல வொர்க் பண்ற வரைக்கும் எதுலையும் பேய்த்தனமாக வேகம். அடுத்து மேடம் மனசுல என்ன நினைக்கிறாங்கன்னு யாருக்குமே தெரியாது. சந்தியா சொல்றதை செய்ய மாட்டா, செய்யுறதை சொல்ல மாட்டா அப்படின்னு பஞ்ச் டயலாக் சொல்லி அதை அப்படியே பாலோ பண்ணுவாங்க. உண்மைய சொல்றேன். அண்ணி இவள கட்டிக்கிறவன் எந்த நேரத்தில கல்லை தூக்கி போட்டுடுவாளோன்னு பயந்துகிட்டே தான் தூங்க வேண்டியிருக்கும். அந்த அளவுக்கு சிரிச்சுகிட்டே டார்ச்சர் பண்ற ஆளு. அவ பொண்ணு மாதிரியா நடந்துக்கிறா. ப்பா...பேய் மாதிரி இருக்கா”

“அவ எப்போ பொண்ணா தெரியுறாளோ அப்போ நீங்க சொன்னதை கன்சிடர் பண்றேன்.” என்றான் கார்த்திக்.

“காதி அதுக்கு நீ எடுத்திருக்க வழி தப்பு. அவளை கத்தி மேல நடக்க வைத்து வேடிக்கை பாக்கிற. ஆனா, எனக்கு என்னமோ அவ பர்த்டே பார்ட்டிக்கு நீ அவளை மனசுல உணர்ந்து பாடினியோன்னு தோணுது. ஏன்னா இசைல என்னோட அனுபவத்தை வைச்சு சொல்றேன். மனசுல ஒருத்தவங்களை வச்சிட்டு பாடுறப்போ தான்  அவ்வளவு பிரமாதமா பாட முடியும். நீ பாடுனதுலே அது தான் பெஸ்ட். அவளை லவ் பண்றேன்னு தோணுது. மோதல் - காதல் ன்னு சொல்லுவாங்களே அது மாதிரி” என்றாள் மீரா.

அவள் சொன்னதும் சிரித்துவிட்ட கார்த்திக், “இதுக்கு தான் வீட்டில அம்மா   மாதிரி வெறும் தூர்தர்ஷனோட விடணும். அமெரிக்கால கூட  சூப்பர் சிங்கர் ஒரு எபிசோட் விடாம பாத்து அதுல வர்ற ஜட்ஜஸ் மாதிரியே பேச ஆரம்பிச்சுட்டீங்க. நீங்க அவ என் லவ்வரோ  அப்படிங்கிற கண்ணோட்டத்திலே பாக்குறீங்க. அதான் அப்படி தோணுது. எப்பவுமே நான் நல்லா பாடுறேன்னு தான எல்லாரும் சொல்லியிருக்காங்க. எத்தனை ப்ரோகிராம்ல பாடியிருக்கேன். இந்த பார்ட்டில மட்டும் தான் அதுவும் அவளுக்காகவே பாடின மாதிரி சொல்றீங்களே அண்ணி. ஹய்யோ…..ஆனா ஒன்னு, என்னை மாதிரி எத்தனை பேரு இவளால பாதிக்கப்பட்டு பழி வாங்க துடிச்சுக்கிட்டு இருக்காங்களோ...தெரியலை” என்று தன் கணிப்பை சொன்னான்.

“அப்படியெல்லாம் இல்லை. உனக்கு மட்டும் தான் சந்தியாவை  பிடிக்கலை. நம்ம வீட்டில எல்லாருக்கும் அவளை பிடிச்சிருக்கு. அத்தை, மாமா முதற்கொண்டு. அவ்வளவு ஏன், நேத்து பார்ட்டில எங்கப்பாவே அவளை கெட்டிக்காரின்னு பாராட்டினாங்க. அப்பா கரக்டா ஜட்ஜ் பண்ணுவாங்கன்னு நீயே அடிக்கடி சொல்லுவியே. இப்போ இதுக்கு என்ன சொல்ற?” எனக் கேட்டாள் மீரா.

“அது என்னை கெட்டிக்காரன் அவங்க சொன்னாங்க. அதுனால அப்படி சொன்னேன். ஆனா, உங்கப்பாவும் அவ நடிப்பை நம்பி ஏமாந்து போயிட்டாங்களே பாவம்! இனிமே அவங்களை அப்படி சொல்ல மாட்டேன்” என்றான் கார்த்திக்.

“அடப்பாவி இப்போ அப்பாவை தப்பு சொல்றியா? உன்கிட்ட பேசி சந்தியாவால மட்டும் தான் ஜெயிக்க முடியும். அதான் உனக்கு அவளை  பிடிக்கலை” என்றாள் மீரா.

அவர்கள் இருவரும் தீவிரமாக பேசிக் கொண்டிருக்க, “சந்தியாவை பிடிக்கலையா” அதிர்ச்சியை எதிரொலித்த குரலை கேட்டு இருவரும் திரும்ப, அங்கே தன்ராஜ்  கம்பீர உருவமாய் முகத்தில் கேள்வியோடு நின்று கொண்டிருந்தார்.

ஆட்டம் தொடரும் ...     

Go to Episode 13  

Go to Episode 15

 

{kunena_discuss:610}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.