படுக்கையில் படுத்து கண்கள் மூட காவேரிக்கு கோபம் அதிகமானது
ஆவேசமாக அறைக்குள் நுழைந்து கதவை சாத்தி தாள்பாள் போட்டவள் படுத்திருந்த கொம்பனிடம் சென்று அவனை திட்டலானாள். அவளது திட்டலைக் கேட்டு கோபம் வந்தாலும் தாய் சொன்னதை மனதில் வைத்துக் கொண்டு அமைதியாகிப் போனான். அவளே ஓய்ந்துப் போய் அவனை வியப்பாக பார்த்தாள்
”தூங்கிட்டான் போல இருக்கு சே இது தெரியாம வாய்வலிக்க கத்திட்டோம் தூக்கம் வருது பேசாம போய் தூங்கலாம்” என நினைத்தபடியே படுக்கையில் அவனுக்கு பக்கத்தில் சென்று படுத்துவிட்டாள்.
அவள் கண்கள் மூடி உறங்கும் வரை அமைதியாக இருந்த கொம்பன் மெதுவாக கண்கள் திறந்து அவளை நோட்டமிட்டான், அவள் நன்றாக உறங்குவது தெரிந்ததும் மெதுவாக தன் இரு காதில் இருந்த பஞ்சை எடுத்து கட்டிலுக்கு கீழே போட்டுவிட்டு நீண்ட பெருமூச்சுவிட்டு கண்கள் மூடி உறங்கலானான், பாதி இரவில் காவேரி அவன் மீது கைகால் போட அவனோ அதில் கண் விழித்தான்
”இவள் ஒருத்தி” என திட்டிக் கொண்டே அவளை தள்ளிவிட்டு படுத்தான்.
10 நிமிடம் கழித்து மீண்டும் அதே போல கைகால் போட்டு படுத்தாள் காவேரி இம்முறை அவன் அவளை எழுப்பினான்
”அம்மா, தாயே, அடியேய் என் முறைபொண்ணே, சண்முகம் பெத்த மகளே, கண்ணை திறந்து பாரு எழு எழுடி” என காட்டுக்கத்தல் கத்த அதில் சற்று தூக்கம் கலைந்து என்னவென அவனைப் பார்த்தாள் காவேரி
”என்ன”
”நொன்ன என்னடி இது நீ பாட்டுக்கு என் மேல கைகால் போட்டு படுக்கற தள்ளி படு”