மறுநாள் பொழுது விடிந்தது
முதலில் காவேரிதான் கண்கள் திறந்தாள், அவளால் அசைய முடியவில்லை கஷ்டப்பட்டு என்னவென பார்க்க அவனும் அவளும் இறுக்கமாக அணைத்தபடி உறங்கிக் கொண்டிருந்தார்கள்.
இப்போது காவேரிக்கு கஷ்டமாகிப் போனது அவனை தள்ளிவிட முயல அவனோ இன்னும் அவளை அணைக்கவே செய்தான், சில நொடிகள் கோபமாக இருந்தவள் அதன்பின் அவனை ரசிக்கலானாள், அவனது அருகாமை அவளை ஈர்த்தது, அவளும் அவனை கட்டிக் கொண்டாள்
அவனின் மீது எழுந்த வாசத்தை முகர்ந்தாள், என்னதான் வெறுப்பில் திருமணம் நடந்தாலும் அவளின் மனதின் ஏதோ ஒரு மூலையில் அவன் மீதான அன்பு இப்போது முளைவிட்டது, அது எப்போது காதலாகுமோ அவளோ மென்மையாக புன்னகைத்தபடியே அவனது கன்னத்தை தனது விரலால் வருடிக் கொண்டே அவனது மீசையையும் வருட அதில் அவன் அசைந்தான், உடனே கண்கள் மூடிக் கொண்டு உறங்குவது போல பாசாங்கு செய்தாள் காவேரி.
கொம்பனோ கண் விழித்ததும் தான் தன் முறைபெண்ணை கட்டியணைத்துக் கொண்டிருப்பதைக்கண்டு அதிர்ந்து சட்டென அவளை விட்டு விலகினான் பயத்தில் அவளையே உற்று உற்றுப் பார்த்து நிம்மதியானான்
”நல்லவேளை இவள் தூங்கறா, இல்லைன்னா நான் செஞ்ச காரியத்துக்கு என் குரல்வளையை கடிச்சி துப்பியிருப்பாளே, யப்பா சாமி தப்பிச்சிட்டோம், இந்த வீட்ல இருக்கறவரைக்கும் உசுரை பத்திரமா பார்த்துக்கனும்டா சாமி, இவள் எழறதுக்குள்ள இங்கிருந்து போயிடறது நல்லது” என சொல்லிக் கொண்டே அறையை விட்டு வெளியேறும் சமயம் காவேரி வேண்டுமென்றே காபி என சத்தமாக சொல்ல அதைக்கேட்டவன் திரும்பி அவளைப் பார்த்தான், அவள் பாதி தூக்க கலக்கத்தில் இருந்தாள்
”மகாராணி எழுந்துட்டா போல, ம் எல்லாம் நேரம், காபி வேற போடனுமா போடுவோம்“