”என்னடா நண்பா என்னதான் தங்கச்சின்னாலும் நட்பு வேற தானே”
”சரி விடு, அவள் கத்துக்கொடுத்த பாடத்தை வைச்சி அவளை மடக்கறேன், என்னை காதலிக்க வைக்கறேன், அப்புறம் அவளே வாங்க நாம நம்ம வீட்டுக்குப் போகலாம்னு சொல்ல வைக்கிறேன்” என்றான் உறுதியாக
”இதெல்லாம் நடந்தா நல்லாதான் இருக்கும் ஆனா நடக்கனுமே”
“கண்டிப்பா நடக்கும் நாளையில இருந்து பாரு இந்த கொம்பனோட ஆட்டத்தை என்னை ஆட்டிவைக்க இருந்தவளை நான் ஆட்டிப்படைக்கறேன்”
”என்னடா இப்படி பேசற தப்புடா அன்பால அவளை கட்டிப்போடு”
”சரி அப்படியே செய்றேன் இந்த விசயத்தை அவள்கிட்ட சொன்ன நண்பன்னுகூட பார்க்க மாட்டேன் கொன்னுடுவேன்“
”நான் சொல்ல மாட்டேன் ஆனா அவள் மகா புத்திசாலி நீ செய்றதெல்லாம் கவனமா பார்த்துக்கிட்டுதான் இருக்கா, நீ போடற திட்டத்தை அவள் தெரிஞ்சிக்கிட்டா உன் நிலைமை படு மோசமாயிடும், ஜாக்கிரதை” என சொல்ல அவனோ அதை இயல்பாக எடுத்துக் கொண்டு உறங்கச் சென்றான்
மறுநாள் காலையில் காவேரி எந்த உடை அணிகிறாள் என வேவு பார்க்கும் வேலையை சண்முகத்திடம் தந்திருந்தான் கொம்பன், அதன்படி அவரும் கவனமாக இருந்தார். காவேரியும் முதலில் சிவப்பு நிறத்தில் உடை அணிந்தாள் அதை கண்டு கொம்பனிடம் சொல்ல அவனும் சிவப்பு நிற சட்டையை அணிந்தான்.
அடுத்து கணக்குப்பிள்ளையோ காவேரி பச்சை நிற உடை அணிந்திருக்கிறாள் என சொல்ல குழம்பினான் ஆனாலும் பச்சை நிறத்திற்கு மாறி அவளை தேடிச் செல்ல அவளோ மஞ்சள் நிறத்தில் உடை அணிந்திருக்க அதிர்ந்தான்.