ஒரு இடத்தில் மாதவியும் கோவலனும் சந்தித்துக் கொண்டார்கள், அவனைக்கண்டதும் மாதவி முகத்தை வெடுக்கென திருப்பிக் கொண்டாள், கோவலனோ மாதவியைக்கண்டதும் பரவசமானான், அதிலும் அவள் புடவையில் இருக்க அவனின் மனது அலைபாய்ந்தது அருகில் தாத்தா இருப்பதால் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான் ஆனால் மாதவி எங்கு செல்கிறாள் கம்பெனி செல்லும் வழி இதுவல்லவே என நினைத்து குழம்ப மாதவியின் வண்டி நகர்ந்தது கூடவே இவனது வண்டியும் சென்றது.
மாதவி கல்லூரி நோக்கிதான் சென்றாள். அதைக்கவனித்த கோவலனுக்கு குழப்பமே மிஞ்சியது.
முதலில் பிரின்சிபால் வண்டி காலேஜ்க்குள் நுழைந்தது, மாணவர்கள் யாரும் வகுப்பில் இல்லை அனைவரும் வழக்கப் படி ஆங்காங்கு உலாத்திக் கொண்டும் கதை பேசிக் கொண்டும் நேரத்தை வெட்டியாக ஓட்டினார்கள், கார் வரவும் என்னவென பார்த்தார்கள் உள்ளிருந்து கண்ணகி இறங்கவும் அனைவருக்குமே அதிர்ச்சி, அடுத்து தாளாளர் வண்டி வந்து நின்று ஈஸ்வரமூர்த்தியும் கோவலனும் ஒன்றாக இறங்கி நிற்கவும் அவர்களை கண்டதும் அதிர்ச்சி வந்தது, மாணவர்களுக்கு அதிலும் ஈஸ்வரமூர்த்தியைக் கண்டதும் மாணவர்கள் தன்னால் அவருக்கு மரியாதை அளித்து வணக்கம் சொல்ல அவரோ அவர்களைப் பார்த்து கோபத்தில்
”எல்லாரும் வகுப்புக்கு செல்லாம இங்க என்ன செய்றீங்க” என கத்த அதில் அங்கிருந்த அனைவருமே நடுங்கிப் போனார்கள்
கண்ணகியோ
”எல்லாரும் வரிசையில நில்லுங்க” என சத்தம் போட மாணவர்கள் உடனே ஒழுங்காக வரிசையில் நின்றார்கள்.
அந்நேரம் மாதவி வந்து சேர்ந்தாள். மாதவி வரவும் கோவலனின் கவனம் அவள் பக்கம் தாவியது. மாதவியோ எதையும் யாரையும் பாராமல் நேராக வந்து ஒரு இடமாக நின்றுவிட்டாள். கோவலனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை மாதவி ஏன் இங்கு வந்தாள் என்று நினைத்து குழம்பினான்