வீரசிங்கம் கூட மகனின் எண்ணத்தைப் புரிந்துக் கொண்டு எழுந்துக் கொண்டார், ஆனால் மங்களம் மட்டும் குழந்தை போல அடமாக அமர்ந்துக் கொண்டு முடியாது என தலையை ஆட்டிவைக்க வேங்கையன் சட்டென தன் தாயை பிடித்து இழுத்தான், அவரோ வராமல் அடம்பிடிக்க வீரசிங்கம் உதவி செய்ய பாஸ்கரனோ
”நண்பா எதுக்காக அம்மாவை இழுக்கற, அவங்க இங்க இருக்கட்டும் நீ போய் போன் பேசிட்டு வாடா” என சொல்ல அவனோ தயங்கி
”அதுக்கில்லை அங்க கல்யாண விசயமா ஏதாவது சந்தேகம் கேட்டா என்னால பதில் சொல்லமுடியாது, அதுக்கு அம்மா அப்பா தேவைப்படுவாங்க அதான் அவங்களை கூப்பிடறேன்”
”ஓ அப்படியா” என சொல்லியவன் ஏதோ ஒன்று தோன்றி
”ஆமா கேட்க மறந்துட்டேன், நான் இங்க வந்தது மஹதியை பொண்ணு பார்க்க ஆமா நீயும் உன் அப்பா அம்மாவும் எதுக்காக இங்க வந்தீங்க, என்ன விசயம்” என கேட்க வேங்கையன் பதட்டமானான். வீரசிங்கம் உடனே
”எப்படி நீயும் வேங்கையும் நண்பர்களோ அதே போல மகேந்திரன் என் நண்பன், இந்த வீட்ல மங்களகரமான ஒரு விசேஷம் நடக்கறப்ப நாங்க இல்லாம எப்படி சொல்லுப்பா, பொண்ணு வீட்டு சார்பா நாலு பேரு இருக்கனும்ல அதானே முறை” என சொல்ல பாஸ்கரன்
”ஆமாமாம் அவசியம் இருக்கனும் ஆமா நீங்க எப்படி நண்பர்கள் ஆனீங்க எங்களை போல பால்ய நண்பர்களா”
”இல்லைப்பா இல்லை நாங்க 6 மாசம் முன்னாடிதான் சந்திச்சோம், அப்பவே நண்பர்கள் ஆயிட்டோம், அவர் பொண்ணு எனக்கும் பொண்ணு போலதானே, அவளுக்கு ஒரு நல்லது நடக்கறப்ப நாங்க துணையா இருக்க வந்தோம் அவ்ளோதான் அவ்ளோதான், மத்தப்படி எதுவும் இல்லை” என அழுத்தமாக தன் மனைவியைப் பார்த்து சொல்ல மங்களமோ கண்கள் கலங்க