வினாயக் தன்னிலை விளக்கம் கொடுத்தான்.
“ஓகே! நேத்து மூணு மணி மாதிரி நீங்க எங்கே இருந்தீங்கன்னு ஞாபகம் இருக்கா?”
“ரொம்ப நேரமா வழி தெரியாம சுத்திட்டு இருந்தேன் இன்ஸ்பெக்டர். டைம் எல்லாம் சரியா பார்க்கலை.”
“நீங்க படிச்சவங்க, பெரிய சையன்டிஸ்ட் வேற, இப்படியா எங்கே போறதுன்னு கூட தெரியாம போவீங்க???”
“அது... கோபத்துல போனேன் இன்ஸ்பெக்டர்!” வினாயக்கின் பார்வை ப்ரியம்வதாவின் பக்கம் போனது. அவள் அவனிடம் விழிகளால் மன்னிப்பு கோரினாள்.
“அப்படி என்ன கோபம்?” என்றான் தென்றல்வாணன் அவர்களின் பார்வை பரிமாற்றத்தை கவனித்துக் கொண்டே!
“நான் தான் உங்க கிட்ட சொன்னேனே இன்ஸ்பெக்டர்!” ப்ரியம்வதா குறுக்கே பேசினாள்.
“லுக் ப்ரியம்வதா, உங்க கிட்ட முதலேயே சொன்னேன். இந்த மாதிரி நடுல பேசினா எனக்குப் பிடிக்காது!” இந்த முறை எரிச்சலை மறைக்காமல் வெளியே காட்டினான் தென்றல்வாணன்.
ப்ரியம்வதா அமைதியாகி விட, தென்றல்வாணன் மீண்டும் வினாயக்கிடம் பேசினான்.
“சந்திரமௌலி உங்களை தான் பார்க்க வந்ததா எனக்கு நியூஸ் கிடைச்சிருக்கு வினாயக்.”
“சான்ஸே இல்லை இன்ஸ்பெக்டர். நான் இங்கே இருக்கேன்னு அவருக்கு தெரியவே தெரியாது. நானே மதியூருக்கு ப்ளான் செய்து வரலை. ப்ரியம்வதா திடீர்னு சொல்லவும் உடனே கிளம்பி வந்தேன்.”
“நான் உங்க மொபைல் பார்க்கலாமா?”