நந்திதாவின் முகத்தில் மீண்டும் குழப்பத்தை கண்டவன் பார்வையை திருப்பிக் கொண்டு அவளுக்கு தெரியாமல் புன்னகைத்துக் கொண்டான்...
மேலும் சில நிமிடங்கள் அமைதியில் கரைந்தது...
அவளை ‘ரொம்ப’ யோசிக்க விடுவது நல்லதிற்கில்லை என்பது உரைக்கவும்,
“உங்க ப்ராஜக்ட் ரொம்ப அருமை நந்திதா... சின்ன வயசுல ஒரு டாய் வச்சிருந்தேன்... நாம மனசுல ஒரு அனிமலை நினைச்சுக்கிட்டா, அது நம்ம கிட்ட கேள்வி மேல கேள்வி கேட்டு எந்த அனிமலை நினைச்சோம்னு கண்டுப் பிடிச்சு சொல்லும்,” என்றான் உதய்
ஆச்சர்யத்துடன் அவனை பார்த்த நந்திதா, “ஓ, உங்களுக்கும் அது பிடிக்குமா? எனக்கும் அது தான் இந்த ப்ராஜக்ட்டுக்கு இன்ஸ்பிரேஷன்,” என்றாள் உற்சாகத்துடன்.
“பரவாயில்லையே, நாம ஒரே மாதிரி யோசிச்சிருக்கோம்... ஆனா, சின்ன வயசுல விளையாடினதை வச்சு என்ன ஒரு அருமையான டிசைன் செய்திருக்கீங்க? இது முழு ரோபோவா மாறும் போது உலகத்தையே கலக்க போகுது...”
உதய் எதிர்பார்த்தது போலவே, நந்திதாவின் வாயில் இருந்த பூட்டு கழண்டு போனது... அதன் பின் அவளின் ப்ராஜக்ட் பற்றி, அதன் வேறு பயன்பாட்டுக்கள் பற்றி பேசி பேசி தீரவில்லை அவளுக்கு...!
அவளின் பேச்சை ரசித்தப்படி கேட்டுக் கொண்டிருந்தவன், வீட்டின் வாசலருகே காரை நிறுத்தி விட்டு,
“ஃபார்ட்டி மினிட்ஸ் போனதே தெரியலை... வீடே வந்திருச்சு.... நீங்க இங்கே இறங்கிக்கோங்க நந்திதா...” என்றான்.
“நீங்க வீட்டுக்குள்ளே வரலையா உதய்?”