உதய் யோசனையுடன் அம்மாவை பார்த்தான்...
“நீங்க சொல்றது சரிம்மா... ஆனால்...”
“இந்த ஆனா ஆவன்னா எல்லாம் வேண்டாம்... என்கிட்டே வந்து இவளை லவ் பண்றேன், அவளை தான் கல்யாணம் செய்துப்பேன்னு எல்லாம் சொல்லலாம்னு கனவு காணாதே...”
“ஹ்ம்ம்....”
“என்ன அப்படி ஏதாவது விஷயம் இருக்கா?”
“அதான் சொல்ல கூடாதுன்னு சொல்லிட்டீங்களே அப்புறம் என்ன ஒரு கேள்வி!”
“மனசுல அப்படி ஏதாவது எண்ணம் இருந்தாலும் இப்போவே மறந்திரு!”
அம்மாவை நேராக பார்த்த உதய், “சரிம்மா...” என்றான் இலகுவாக!
ரேவதி ஒன்றும் சொல்லாமல் அவனை ஊடுருவுவதுப் போல ஒரு பார்வை பார்த்தாள்!
❀✿❀✿❀✿
ராஜசேகரும், காமாட்சியும் சிரிப்பை நிறுத்த முடியாமல் திணறிக் கொண்டிருந்தார்கள்.
“நந்து, நீ இப்படியே ஜோக் சொல்லிட்டு இருந்தா என்னால சாப்பிடவே முடியாது...”
“பரவாயில்லை ஆன்ட்டி, நான் வந்ததுக்கு கொஞ்சம் வெயிட் போட்டுட்டீங்க, அப்படியாவது டயட் கன்ட்ரோல்ல இருந்து அங்கிள்க்கு ஏத்த ஜோடியா மாறுங்க...”
நந்திதா சொன்னதை கேட்டு ராஜசேகர் புன்னகைக்க, காமாட்சி பொய் கோபத்துடன் முறைத்தாள்.