வீட்டில் சமையல் செய்ய வேலையாட்கள் இருந்தாலும் ஏனோ சமையல் மட்டும் சிவரஞ்சனிதான் செய்வார். அவரே சம்யுக்தாவிற்கு சமையலையும் கற்றுக் கொடுத்திருந்ததால் சம்யுக்தா தன் தந்தையிடம்
”இருங்கப்பா நான் உங்களுக்காக காபி கொண்டு வரேன்” என சொல்லிவிட்டு சமையல்கட்டுக்குள் சென்றவள் சிறிது நேரத்தில் சுடசுட காபியை போட்டு எடுத்துக் கொண்டு வெளியே வருகையில் சிவரஞ்சனி வீட்டிற்குள் வந்தார்
”ஏங்க கோயில்ல விசேஷம்ங்க, அபிஷேகத்தை பார்த்துட்டு வந்துட்டேன் இந்தாங்க பிரசாதம்” என சொல்லிக் கொண்டே விபூதியை தன் கணவரிடம் நீட்ட அவர் சிறிது எடுத்து தன் நெற்றியில் வைத்துக் கொண்டவர் அடுத்து சிவரஞ்சனி நீட்டிய குங்கமத்தில் இருந்து சிறிது எடுத்து மனைவியின் நெற்றியில் வைத்தார்
இது எப்பவும் நடக்கும் வழக்கம்தான், அதைக் கண்டு சிரித்தபடியே வந்தாள் சம்யுக்தா
”என்னம்மா எனக்கான அர்ச்சனை முடிஞ்சிடுச்சி போல இருக்கு“ என சொல்லிக் கொண்டு வர அவளைக் கண்டதும்
”என்னடி இது கோலம் குளிக்காம கொள்ளாம காலையிலயே அடுப்படிக்கு போயிருக்க, போச்சி இப்ப திரும்பவும் நான் அடுப்படியை சுத்தம் பண்ணனும், ஏன் நான் வர்ற வரைக்கும் உன்னால பொறுமையா இருக்க முடியாதா அதுக்குள்ள என்ன அவசரம் நீயா காபி போட்டுக்கிட்ட” என திட்ட சிவசங்கரனோ தன் மனைவியை அதட்டினார்
”விடு இன்னிக்கு அவளுக்கு பிறந்தநாள், அவள் விருப்பப்படி இருக்கட்டுமே உனக்கென்ன” என சொல்ல சம்யுக்தாவும் காபியை தன் தந்தையிடம் கொடுத்துவிட்டு அவரின் பக்கத்தில் அமர்ந்து தாயை பார்த்தபடியே காபியை பருக அவரோ
”ராமா ராமா கல்யாணம் பண்ணி போற வீட்லயும் இப்படி இருக்காத என்னைத்தான் திட்டுவாங்க, வளர்த்த வளர்ப்பு சரியில்லைம்பாங்க”