”அட என்னம்மா நீ, போலீஸ் தேடற என்கவுன்டர் பண்ற அளவு குற்றவாளி அவன், அவனுக்காக நீ இங்க நிக்கற, அவன் செத்தானா சாகட்டும்னு விட்டுட்டு இன்னொரு வாழ்க்கையை தேடிப்போம்மா, அதை விட்டுட்டு இங்க நின்னு எங்க நேரத்தையும் கெடுத்துக்கிட்டு உன் வாழ்க்கையும் கெடுத்துக்கிட்டு இருக்க கிளம்பும்மா” என சொல்லியவர் சிவசங்கரனிடம்
”யோவ் பெரியாளுதானே நீ, வயசு பொண்ணை கூட்டிக்கிட்டு இந்த மாதிரி இடத்துக்கு வரலாமா, குற்றவாளிங்க வந்து போற இடம், எவனாவது இவளைப் பார்த்து ஆசைப்பட்டா என்னாகிறது உன்னை கொன்னுட்டு இவளை தூக்கிட்டு போயிடுவானுங்க சொன்னா கேளுய்யா உன் பொண்ணை கூட்டிட்டு சென்னைக்கு போயிடு இங்க வராதய்யா“
”சார் ஒரு முறை சார், என் பொண்ணுக்காக இல்லைன்னாலும் எனக்காக சார் 5 நிமிஷம்தான் இன்ஸ்பெக்டரை பார்த்து பேசி அவர்கிட்ட அனுமதி வாங்கிட்டு மார்ச்சுவரியில இருக்கற பாடியை பார்க்கனும் சார் அது தில்லைதானான்னு தெரிஞ்சிக்கனும் சார்”
“தெரிஞ்சிக்கிட்டு என்னய்யா செய்யப் போற, அது தில்லைதான்னு போலீஸ் ரிக்கார்டு வைச்சி அடையாளத்தோட பிடிச்சிருக்காங்கய்யா”
”இல்லை அவர் தில்லையா இருக்க முடியாது, எனக்குத் தெரியும் எனக்கு நம்பிக்கையிருக்கு” என சம்யுக்தா கத்த சிவசங்கரனும் கான்ஸ்டபிளிடம்
”ப்ளீஸ்ங்க ஒரு முறை இவளோட சந்தேகம் தீர்ந்ததும், நாங்களே ஊரை விட்டு போயிடுவோம் ப்ளீஸ்ங்க” என கெஞ்ச அவருக்கே பரிதாபமாக இருந்தது
”பணக்காரர் நீங்க இப்படி கெஞ்சறீங்களே“
“பணம் வேணா தர்றேன்ங்க”
“கொடுத்த வரைக்கும் போதும்யா, வாங்கின பணத்துக்காக நானும் உங்களுக்கு பாதுகாப்பு தர வேண்டியதா போச்சி இந்த விசயம் இன்ஸ்பெக்டருக்கு தெரிஞ்சா திட்டுவாரு“