“அதை அப்புறம் பார்ப்போம்... இப்போ முதல்ல அந்த கமலை இந்த குட்டி சாத்தான் கையில மாட்டி விடுற வேலையை மட்டும் பார்ப்போம்...”
❀✿❀✿❀✿
பூங்கோதையிடம் தன் மூலம் இந்த திருமண பேச்சு ஆரம்பித்ததாக சொல்லி கமலின் ஜாதகத்தை வாங்கிக் கொடுத்தாள் ஹேமா...
ஜாதக பொருத்தம் நல்ல விதமாக இருக்க பெண் பார்க்கும் படலத்திற்கு ஏற்பாடு செய்தார்கள்.
அன்று காலை முதலே சுமித்ராவிற்கு ஜன்னி வந்தது போல மனதினுள் நடுக்கம்...
வருவது கமல் தான் என்றாலும் அவளுள் என்னவென்றே சொல்ல முடியாத ஒரு விதமான படபடப்பு...
அம்மா, ஹேமா என அவளுக்கு பிடித்தவர்கள் அருகே இருந்தாலும் கூட ஏதோ ஒரு கலக்கம்...
கமலின் குடும்பம் சொன்ன நேரத்திற்கு வந்து சேர்ந்தார்கள்....
உபசரிப்பான பேச்சுக்களுக்கு பிறகு சுமித்ராவை அழைத்து வர சொன்னார்கள்...
கமலை பார்க்க போகும் ஆர்வம்... எல்லாம் சரியாக நடந்து அவனுடன் திருமணம் நிச்சயமாக வேண்டுமே என்ற கவலை... கூடவே பெண் பார்க்கும் படலத்துடன் சேர்ந்து வரும் பரபரப்பு என கலவையான மனநிலையுடன் வந்தவள், ஒவ்வொருவருக்காய் தட்டில் இருந்த காஃபியை கொடுத்தாள்....
கமலின் அருகே செல்லவே அவளின் நடை பின்னியது...