ஒருவேளை அவள் நல்ல விதமாக வேலை செய்தால், அவள் திறமைக்காக அவள் அங்கேயே வேலையை தொடர வாய்ப்பு இருக்குமோ???
தன்னுடைய சொந்தமாக இருந்த கம்பெனியில் ஒரு ஊழியராக வேலை செய்வது எளிதல்ல... ஆனால் கோபிக்காக செய்யலாம்...!
அந்த மித்ரன் அதற்கு சம்மதிப்பானா?
அவனுக்கு பிடித்தது போல வேலை செய்ய அவளால் இயலுமா?
கடந்த ஒரு மாதத்தில் அவனை சந்தித்த மூன்று வேளையிலும் எதனாலோ அவளுக்கு சிங்கம், புலி, கரடி என காட்டு மிருகங்கள் தான் நினைவுக்கு வந்தது....!
அவனின் பேச்சும், தோரணையும், முன் கோபமும்.... அவனுக்கு கீழே வேலை செய்வது சுலபமல்ல என்பதை எடுத்து சொன்னது...
ஆனாலும் கோபிக்காக சிறு முயற்சி செய்து பார்ப்பது என்று முடிவு செய்தாள் சரண்யா.
❀✿❀✿❀✿
நிஷாவை பள்ளியில் விட்டு விட்டு, சரண்யா அலுவலகத்தை அடைந்தப் போது மணி ஒன்பதை தாண்டி இருந்தது.
எப்போதும் அவள் பயன்படுத்திக் கொண்டிருந்த அறையை மித்ரன் எடுத்துக் கொண்டிருப்பது புரிந்தது...
என்ன தான் கம்பெனியை அவன் வாங்கி இருந்தாலும், அவள் வரும் முன் அவள் பயன்படுத்திக் கொண்டிருந்த அறையை அவளிடம் ஒரு வார்த்தையும் சொல்லாமல் அவன் எடுத்துக் கொண்டிருப்பது அவளுக்கு மரியாதை குறைவாக தோன்றியது....