அது கோபி பயன்படுத்திய அலுவலக அறை என்பதால் உணர்வு பிணைப்பும் அவளுக்கு இருந்தது...!
இப்போது அவளின் டெஸ்க் எது? என்ன வேலை செய்வது??? மித்ரனிடம் நேராக சென்றுக் கேட்க வேண்டுமோ???
அவன் அழைக்காமல் அவனை சென்று சந்திக்க அவளுக்கு தயக்கமாக இருந்தது...!
‘ஜி.எஸ்’ஸில் வேலை செய்யும் பெரும்பாலானோர் உற்பத்தி செய்யும் ப்ரொடக்ஷன் லைனில் வேலை செய்பவர்கள்... அலுவலகத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள் மொத்தம் ஐந்தே பேர் தான்...
இப்போது மித்ரனையும் சேர்த்து ஆறு பேர்...
சரண்யா உற்பத்தி செய்யும் பகுதிக்கும் செல்லாமல், அலுவலக அறை பக்கமும் செல்லாமல், அது இரண்டையும் இணைக்கும் பகுதியில் நின்று யோசித்துக் கொண்டிருந்ததால் அங்கே வேலை செய்யும் ஒருவரும் அவளை பார்க்கவில்லை.
அவள் மேலே என்ன செய்வது என்று தயக்கத்துடன் நிற்க, அலுவலக பியூன் கந்தசாமி அந்த பக்கமாக வந்தார்.
சரண்யாவை பார்த்ததும் அவரிடம் மெல்லிய நிம்மதி...
“வந்துட்டீயாம்மா... மித்ரன் சார் ஒரே கோபமா கத்திட்டு இருந்தார்... நீங்க வந்த உடனே வந்து பார்க்க சொன்னார்...”
“நான் போய் பார்க்குறேண்ணா...” என்ற சரண்யா மேலே யோசிக்காமல் மித்ரன் இருந்த அறை பக்கம் சென்றாள்.