அவள் மீட்டிங்கில் பங்கேற்பது பிடிக்கவில்லை என்பதை மித்ரன் தண்மையாக சொல்லி இருந்தால் கூட சரண்யா புரிந்துக் கொண்டிருப்பாள்... இவனுக்கு அவளை இப்படி காயப் படுத்தி பார்ப்பதில் ஒரு சந்தோஷம்...!
அத்தனை பேர் முன் அவன் கேட்ட கேள்வியில், அந்த தோரணையில் சரண்யாவிற்கு கண்களை கரித்துக் கொண்டு கண்ணீர் துளிகள் எட்டிப் பார்த்தது.
இவன் முன் அழக் கூடாது என கண்ணீரை அடக்க முயன்றபடி,
“சாரி... லாஸ்ட் வீக் அட்டென்ட் செய்த ஞாபகத்தில் வந்துட்டேன்... சாரி...” என்று சொல்லிவிட்டு திரும்பி நடந்தாள்.
அங்கிருந்தவர்களின் பரிதாபமான பார்வை வேறு அவளை வாட்டியது...
“குட்... கெட் அவுட் சொல்றதுக்கு முன்னாடி வெளிய போற அளவுக்காவது உனக்கு அறிவிருக்கே,” என்ற மித்ரனின் குரல் அவளை தொடர்ந்தது!
மற்றவர் முன் அவமானப் படுவது கொடுமை என்றால், மற்றவர்கள் பரிதாபப் படும் நிலைக்கு தள்ளப் படுவது அதை விட கொடுமை!
இரண்டையும் ஒன்றாக அனுபவித்த சரண்யா கண்ணில் எட்டிப் பார்த்த நீரை அடக்க உதடுகளை அழுந்த கடித்தப் படி மித்ரனின் அறையை விட்டு வெளியே வந்தாள்.
மூன்று மாதங்களை எப்படியாவது ஓட்டி விடுவது என்று அவள் இழுத்து பிடித்து வைத்திருந்த பொறுமை முற்றிலும் கரைந்து போயிருந்தது. இதற்கு மேல் அவளால் மித்ரனின் தாக்குதலை தாங்க முடியாது என்று தோன்றியது.
கோபி இருந்த போது எத்தனையோ நாட்கள் இதே கம்பெனிக்கு வந்திருக்கிறாள்... ராணி போல அவள் வாழ்ந்திருந்த நாட்கள் அது...