அதற்கு பிறகு கூட இதே கம்பெனியின் சொந்தக்காரியாக இங்கே வலம் வந்திருக்கிறாள்!!!
கண்ணில் இருந்து இப்போது வெளியே எட்டி பார்த்த நீரை விரலால் துடைத்தவள், மனதை திடப் படுத்திக் கொண்டாள்.
கம்பெனியை விற்றாகி விட்டது... ஒரு மாதம் என்றால் என்ன, மூன்று மாதங்கள் என்றால் என்ன? பெரிய வேறுபாடு இல்லையே... இனி இது அவளுடைய கம்பெனி இல்லை!
விற்றப் போதே வேறு வேலையையும் தேட தொடங்கி இருந்திருக்க வேண்டும்! தவறு செய்து விட்டாள்!
பரவாயில்லை... சரி செய்து விடலாம்..!
வேகமாக மனதுள் அடுத்து செய்ய வேண்டியதை பட்டியலிட தொடங்கினாள் சரண்யா.
❀✿❀✿❀✿
சேகரின் வீட்டு காலிங் பெல்லை அழுத்தி விட்டு கதவு திறக்க காத்திருந்தாள் சரண்யா.
சேகருக்கு டைபாய்ட் ஜுரம் வந்திருந்ததால் ஜி.எஸ் பக்கம் வர முடியவில்லை.
அடுத்த வேலை தேடுவதற்கு சேகரை தான் பெரிதும் நம்பி இருந்தாள் சரண்யா. இன்னும் சில நாட்களில் நண்பர் ஒருவரின் கம்பெனியில் வேலை வாய்ப்பு ஒன்று வர போவதாக முன்பு சொல்லி இருந்தார் சேகர்.
ஆனால், அத்தனை நாட்கள் எல்லாம் காத்திருக்கும் பொறுமை சரண்யாவிற்கு இப்போது இல்லாமல் போனதால், சேகரிடம் சொல்லி விட்டு மும்முரமாக வேறு வேலை தேட திட்டமிட்டிருந்தாள்.
கதவை திறந்த சேகரின் மனைவி கௌசல்யா, சரண்யாவை புன்னகையுடன் வரவேற்றாள்.