ரோஹினி குழந்தையாக இருந்த காலம் முதலே அவளுடைய அம்மா, அப்பா என அனைவருக்கும் அவள் இரண்டாவது தான்! கூடவே முழு நேர சிறை போன்ற அரண்மனை வாசம்!
அதெல்லாம் போதாதென்று, இப்படி தான் நடக்க வேண்டும், அப்படி தான் பேச வேண்டும், இப்படி சிரிக்க வேண்டும் என்ற ஆயிரமாயிரம் விதிமுறைகள் வேறு!
இப்போது கல்யாணம் செய்துக் கொள்ள சொல்பவனுக்கும் அவள் மீது அன்பில்லை எனும் போது ரோஹினியின் மனம் திருமணத்திற்கு எதிராக கலகம் செய்வதை தவறென்றும் சொல்ல முடியாது. இளவரசியாக இருந்தாலும் அவளும் சின்ன பெண் தானே! அவளுக்கு என்று விருப்பு வெறுப்புகள் இருக்க கூடாதா என்ன!
யோசித்துப் பார்த்த கலாவிற்கு ஒரு ஐடியா தோன்றியது.
ரோஹினியை சமாதானம் செய்து விட்டு, தொலைப்பேசியை நோக்கி சென்றாள்.
✽✽✽
‘கொர்... கொர்... கொர்...’ மெல்லிய குறட்டையுடன் ஆழ்ந்த தூக்கதில் இருந்தாள் சாரதா.
டிவியில் அவள் பார்த்துக் கொண்டிருந்த மதிய நேர சீரியல் அதன் போக்கில் ஓடிக் கொண்டிருந்தது.
‘ஹே என் கோலி சோடாவே! என் கறி கொழம்பே! உன் குட்டி பப்பி நான் டேக் மீ டேக் மீ’ என அலறிய செல்ஃபோன் சாரதாவின் தூக்கத்தை கெடுத்தது.
பாதி தூக்கத்தில் எரிச்சலுடன் ஃபோனை கையில் எடுத்து, “ஹலோ,” என்றாள்.
“சாரதாக்கா நான் கலா பேசுறேன்,” என்றது ஃபோனின் வழியே வந்த குரல்!