தலைமை பொறுப்பில் இருப்பவருக்கு தொலைநோக்கு பார்வை இருக்க வேண்டும்... மற்றவரை சரியாக வழி நடத்தும் திறமை இருக்க வேண்டும்... பிரச்சனைகளை தீர்க்கும் அறிவு இருக்க வேண்டும்...
இதை பற்றி எல்லாம் சரண்யா யோசித்தது கூட இல்லை... எல்லோருக்கும் நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்திருக்கிறாள்... மற்றபடி சேகர் உதவுவார் என்ற நம்பிக்கை மட்டுமே இருந்தது...
இப்போது யோசித்து பார்த்ததில் சேகர் சாரின் உதவியினால் தான் இந்த அளவிலாவது விஷயங்கள் வந்து நின்றது என்று சரண்யாவிற்கு தோன்றியது.
மற்றபடி அவளின் நிலைமை படு மோசமாக தான் இருந்திருக்கும்!
ஒருவிதத்தில் பார்த்தால் ஜி.எஸ் எண்டர்ப்ரைசஸ் மித்ரனால் தான் தப்பித்தது என்றும் சொல்லலாம்... மித்ரன் அவளிடம் எப்படி நடந்துக் கொண்டிருந்தாலும் கம்பெனியை நல்ல விதத்தில் தான் நிர்வகிக்கிறான்.
யோசித்தப் படி நடந்து வந்த சரண்யா அவளின் எதிரே வந்த கான்ஸ்டபில் கிருஷ்ணனை பார்த்து புன்னகைத்தாள்.
மளிகை கடையில் நடந்தது பற்றி சுலோச்சனாவிடம் சரண்யா சொன்னதினால், அவளின் பாதுகாப்பிற்காக அவர்கள் வசித்து வந்த தெருவில் இருந்து இரண்டு தெருக்கள் தள்ளி இருந்த தெருவில் வசித்து வந்த கான்ஸ்டபிளை சரண்யாவிற்கு அறிமுகம் செய்து வைத்திருந்தாள் சுலோச்சனா.
அதனால் அவளுக்கு பாதுகாப்பு கிடைத்ததோ இல்லையோ, சரண்யாவினுள் கொஞ்சமாக தைரியம் வந்திருந்தது.
வீடு அருகில் வந்து விடவும், கிருஷ்ணன், மைத்ரேயி, மித்ரன், கம்பெனி என அனைத்தையும் மறந்து நிஷாவை பற்றி யோசிக்க தொடங்கினாள் சரண்யா.