“பரவாயில்லை மேம்... நான் இந்த மாதிரி பேச்சை எல்லாம் இப்போ இந்த காதுல வாங்கி அந்த காதுல விட்டுட்டு போயிட்டே இருப்பேன்...”
“ம்ம்ம்ம்... ஸ்டில்... ஹ்ம்ம்.... அப்புறம்... ம்ம்ம்... சாரி சரண்யா! மித்ரன் என் அண்ணன்னு உன் கிட்ட மறைக்கனும்னு நான் நினைக்கலை..."
சரண்யா அமைதியாக மைத்ரேயியை ஒரு பார்வை பார்த்தாள். பின், மெல்ல புன்னகைத்தாள்.
“இன்னைக்கு நீங்க சாரி கேட்குற மூட்ல இருக்கீங்க போலிருக்கு! மித்ரன் உங்களுக்கு யாரா இருந்தாலும் அது எனக்கு தேவையான விஷயமே இல்லை... அவர் உங்க அண்ணனா இருந்தும், நான் அவரை பத்தி அவ்வளவு கம்ப்ளெயின்ட் செய்த பிறகும். கோபப்படாம எனக்கு வேலை கொடுத்ததுக்கு நான் தான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லனும்...”
“ப்ச் ப்ச்... அதெல்லாம் இல்லை... என் அண்ணனை பத்தி எனக்கும் தெரியும்... நீ அவன் பேசினதுக்கு டென்ஷன் ஆகாம ஈசியா எடுத்துக்கிட்டது எனக்கு பிடிச்சிருக்கு... உன் கிட்ட வந்திருக்க இந்த மாற்றம் நல்ல விஷயம் தான்...”
புன்னகைத்த சரண்யா, அந்த பேச்சை தொடராமல், “தேங்க்ஸ் மேம்... நான் போய் இந்த ஃபீட்பேக் எல்லாம் எனக்கு மறக்குறதுக்கு முன்னாடி டீமுக்கு சொல்லிடுறேன்,” என்று சொல்லிவிட்டு சென்றாள்.
✽✽✽
ஜி.எஸ் என்டர்ப்ரைசஸில் வேலை செய்யும் அனைவரும் அங்கே அந்த மாலை வேளையில் ஒன்றாக கூடி இருந்தார்கள்.
சலசல என கேட்டுக் கொண்டிருந்த அவர்களின் பேச்சு சத்தம், மித்ரன் அங்கே வந்த உடன் நின்றுப் போனது.