கணீரென்ற குரலில் பேச தோடங்கினான் மித்ரன்.
“ஜி.எஸ்ல வேலை செய்ற எல்லோரும் இங்கே, இந்த இடத்துல இருக்கீங்க... நான் ஒரு சந்தோஷமான விஷயம் சொல்ல தான் உங்க எல்லோரையும் வர சொன்னேன்... நான் கம்பெனி பொறுப்பெடுத்த பிறகு முதல் முறையா நம்ம கம்பெனி லாபம் பத்து லட்சத்தை தொட்டு இருக்கு...”
கூடியிருந்தவர்களின் பேச்சு சத்தம், கரகோஷம் என சத்தம் எழ, மித்ரன் பேச்சை நிறுத்தினான்.
ஒரு சில வினாடிகளுக்கு பிறகு மீண்டும் அங்கே அமைதி நிலவ, தன் பேச்சை தொடர்ந்தான் மித்ரன்.
“இது நாம சாதிச்சிருக்கும் ரொம்ப சின்ன மைல்கல் தான்... இன்னும் நிறைய, நிறைய சாதிக்க போறோம்... ஆனாலும் இந்த சின்ன வெற்றியைக் கொண்டாட உங்க எல்லோருக்கும் பத்து சதவிகிதம் போனஸ் அதும் இந்த மாதமே உங்க சம்பளம் கூட தர ஏற்கனவே சொல்லிட்டேன்... இது உங்களுக்கு ஊக்கத்தை கொடுக்கும்னு நம்புறேன்... தொடர்ந்து எல்லோரும் இதே போல ஆர்வத்துடன் வேலை செய்து ஜிஎஸ்க்கு இன்னும் பல வெற்றிகளை கொண்டு வரணும்...”
மித்ரனின் பேச்சை ஒரு ஓரமாக நின்று கவனித்துக் கொண்டிருந்தார் சேகர்.
மித்ரன் இப்போது அறிவித்த செய்தி அவர் மூன்று நாட்களுக்கு முன்பே தெரிந்துக் கொண்டது தான்!
மித்ரன் இதை ஏன் இங்கே அறிவிக்கிறான், எதற்காக இந்த கூடுதல் போனஸ் என்பதை எல்லாம் அவரால் புரிந்துக் கொள்ள முடிந்தது.
ஜிஎஸ்’ஸில் வேலை செய்பவர்களுக்கு சரண்யா மீது இருக்கும் அபிமானம் அவர் அறிந்தது தான். சரண்யாவை மித்ரன் மரியாதையுடன் நடத்தவில்லை என்ற வருத்தம் அங்கே வேலை செய்த அனைவருக்குமே இருந்தது அவருக்கும் தெரியும்.