சினேகா அனாதை இல்லத்தில் வளர்ந்தது தெரிய வரவும் மகாலக்ஷ்மியின் மனம் உருகி போனது.
அன்று முதல் சினேகாவிற்கு உடன் பிறவா சகோதரியாக, நட்புடன் பழகும் நல்ல தோழியாக, வழி நடத்தும் தாயாக, மொத்தத்தில் எல்லாமுமாக மாறி போனாள் மகாலக்ஷ்மி.
சோர்ந்து இருந்த சினேகாவை தட்டிக் கொடுத்து, அவளுக்கு தன்னம்பிக்கை வருமாறு பேசி, தற்காலிகமாக கிடைக்கும் வேலையில் சேர சொன்னாள்.
அப்படி சினேகா முதலில் சேர்ந்தது ஒரு சின்னக் கடையில் கணக்கெழுதும் வேலை. சம்பளம் வெறும் மூவாயிரம் மட்டுமே. படித்த படிப்பிற்கும், செய்யும் வேலைக்கும் எந்த விதத்திலும் சம்மந்தமில்லை.
சினேகா அதை பற்றி புலம்பும் போதெல்லாம் அவளை தேற்றுவாள் மகாலக்ஷ்மி.
அப்படி வேலை செய்யும் போது கிடைத்த ஒய்வு நேரங்களில் இன்டர்நெட்டில் இருக்கும் தகவல்களை கொண்டே 3d மாடலிங் சாஃப்ட்வேர் பயன்பாடுகளை பயின்றாள் சினேகா.
நடைமுறை அனுபவம் இல்லை என்றாலும் தன்னார்வத்துடன் படித்ததால் இன்டர்நெட்டில் இருந்த படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்தே அந்த சாஃப்ட்வேரின் பல அம்சங்களை தன் மனதிலேயே ஸ்க்ரீன் உருவாக்கி முயற்சி செய்வாள்.
அந்த ஆர்வம் தான், கே.ஆர் ஆர்கிடெக்ட்ஸ் கம்பெனியின் வேலை விளம்பரத்தை பார்த்து அவள் விண்ணப்பித்த போது, தியரி அனுபவத்தை மட்டும் கொண்டே இன்டர்வியூவில் அவளை வெற்றி பெற வைத்தது!
ட்ரெய்னீ ஆர்கிடேக்டாக அந்த கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தாள்.
இந்த வேலையில் முன்பு வாங்கிய சம்பளத்தை விட பத்து மடங்கு அதிக சம்பளம் வந்தது...