அம்மாவின் பேச்சை தட்ட விரும்பாமல் ரோஹினியின் பெட்டிகளை கையில் எடுத்த அஜய், அப்போதும் ரோஹினி பக்கம் கோபத்துடன் பார்த்து முறைத்து விட்டு, விடு விடுவென கார் நோக்கி நடந்தான்.
✽✽✽
கார் பயணத்தின் போது வெளியே தெரிந்த காட்சிகளை ஆர்வத்துடன் பார்த்தபடி வந்தாள் ரோஹினி. சென்னையின் சாலைகள் அவளுக்கு புதியதாக இருந்தது!!!
அவளின் பக்கத்தில் அமர்ந்திருந்த சாரதா அவளையே ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அழகான வட்ட முகம்! எடுப்பான நாசி! நேர்த்தியான உதடுகள்!
ரோஹினி... இளவரசி ரோஹினி அழகாகவே இருந்தாள்!
அதிலும் பளிச் பளிச் என மின்னும் அவளின் கண்களை சாரதாவிற்கு மிகவும் பிடித்திருந்தது.
ஆனால் மேலே இருந்து கீழே அவளை ஒரு பார்வை பார்த்தவள், ஹுஹும்... என தலையை அசைத்துக் கொண்டாள்...
ரோஹினி அழகாக இருந்தாலும் அவளின் தற்போதைய ஒப்பனையும், உடையும் அவளுக்கு எந்த விதத்திலும் பொறுந்தவில்லை என்று அவளுக்கு தோன்றியது!
டிவியில் அவள் பார்த்திருக்கும் பழைய ‘வசந்த மாளிகை’ திரைப்பட கதாநாயகி வாணிஸ்ரீ ஸ்டைலில் ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய கொண்டை! அதாவது அவளுக்கு முந்தைய தலைமுறையின் ஹேர்ஸ்டைல்!!!!
உடையோ சேலை என்றுமில்லாமல் ஹாஃப் சாரி என்றுமில்லாமல் இரண்டிற்கும் இடையே நிற்கும் வித்தியாசமான ஒன்றாக இருந்தது!