“இன்னைக்கு என் கிரேஜூவேஷன் டே... நாலு மணிக்கு ஃபங்ஷன்...” என்றாள் ரேஷ்மி மொட்டையாக!
சரி என்பது போல தலை அசைத்த கமல், மனைவியின் ஜாடையில் இருந்த மகளையும், அவளுக்கு பின்னே ஃபோட்டோவில் புன்னகைத்துக் கொண்டிருந்த மனைவியையும் ஒரு சில வினாடிகள் பார்த்தான்...
அவனின் முகம் இளகியதாக ரேஷ்மிக்கு தோன்றியது...
அதை பற்றி அவள் மேலும் ஆராய்ச்சி செய்யும் முன், தன் வழக்கமான விடு விடுவெனும் வேக நடையுடன் அங்கிருந்து சென்றான் கமல்...
ரேஷ்மி அசையாமல் நிற்க, ரோஷனி அவளை செல்லமாக முறைத்தாள்...
“நீங்களும் வாங்கப்பான்னு வாய் திறந்து கூப்பிட்டா குறைஞ்சா போயிடுவ...???”
சித்தியின் கேள்வியில் தன் யோசனையில் இருந்து வெளியே வந்த ரேஷ்மி,
“க்கும்... அப்படி நான் கூப்பிட்ட உடனே அவர் வந்து செல்லம் கொஞ்சிட போறார்....” என்றாள் அசட்டையாக.
“நீ பேசின விதத்துக்கு உன் அப்பா மட்டும் தான் அமைதியா போறார்... வேற யாராவதா இருந்தா அவ்வளவு தான்...”
“அவர் அப்படி ஏதாவது பேசினா கூட பரவாயில்லையே... எல்லா வீட்டுலேயும் இருக்க அப்பா மாதிரி பேசுறார்ன்னு நானும் சந்தோஷப் பட்றுப்பேனே!!!”
“அவன் சுபாவமே அது தான் ரேஷ்மி கண்ணா.... உன் அம்மா இறந்த இரண்டாவது நாளே ஆஃபிஸ் போனவன் அவன்....”