பக்கத்தில் இருந்து வந்த பூங்கோதையின் குரலை கேட்டு அவள் இருந்த பக்கம் திரும்பி பார்த்த ரேஷ்மி,
“ப்ச்.. விடுங்க பாட்டி... அவர் பேச்சு நமக்கு எதுக்கு,” என்று சொல்லி விட்டு,
“சாயந்திரம் மூனரை மணிக்கு எல்லாம் எல்லோரையும் ரெடி ஆக்கி கூட்டிட்டு வந்திருங்க பாட்டி... சித்தி, அத்தை எல்லாம் மணி கணக்கில மேக்கப் செய்றவங்க... அப்புறம் நீங்க வரும் போது ஃபங்க்ஷனே முடிஞ்சிடும் ” என்றாள் கண்ணடித்து..!
ஒரு வினாடி கோபப்பட்டு விட்டு, அடுத்த வினாடியே கலகலக்க தொடங்கி விட்ட ரேஷ்மியின் குணத்தை பற்றி யோசித்துக் கொண்டே தன் வேலைகளை கவனிக்க சென்றாள் ரோஷனி.
சுமித்ராவின் ஜாடை மட்டுமல்லாமல் அவளின் குண நலன்களும் ரேஷ்மியிடம் தெளிவாகவே தெரிந்தது... ஆனால் அந்த ஒற்றுமையை விட வேறு ஒரு விஷயம் தான் ரோஷனியை இன்று அலைக்கழித்தது!
அவள் மனதில் கமல் பற்றிய கேள்விகள், குழப்பங்கள், புதிர்கள் மட்டும் பல வருடங்களாகவே விலகாமல் தொடர்ந்து கொண்டிருந்தது...
மற்றவர்கள் கமல் ஹிட்லர், அவன் குணமே அது தான், என்றெல்லாம் சொல்வதற்கேற்ப தான் கமல் பெரும்பாலும் நடந்துக் கொண்டான். ஆனால் ரோஷனியால் அதை முழுவதுமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை!
சுமித்ராவின் மறைவுக்கு பின் ரேஷ்மியை அவள் தன் குழந்தையாக கவனிக்க தொடங்கிய போது கமல் மறுத்து எதுவும் சொல்லவில்லை... அதற்கு பின் வந்த நாட்களில், தன் மகளுக்கு வேண்டியது ஒவ்வொன்றையும் முன் கூட்டியே திட்டமிட்டு அற்புதமாக நடைமுறை படுத்தி இருந்தான் அவன்...
ஸ்கூல், ட்யூஷன், விளையாட்டு, பாட்டு, எம்பிபிஎஸ் படிப்பு என ரேஷ்மி ஆசைப்பட்ட எல்லாமே அவளுக்கு கிடைத்தது...