“ப்ச்... இப்படி கேவலமா வளர்த்திருக்காங்க!!! சுத்தமா மரியாதை தெரியலை!”
மகனின் கோபத்தினால் டென்ஷன் ஆகாமல், “மரியாதை தெரியலையா? அதான் ‘ங்க’ போட்டு பேசுறாளே, அப்புறம் என்ன?” என கலாய்த்தாள் சாரதா!
“அது மட்டும் தான்ம்மா குறைச்சல்... சரி நீங்க ஆச்சு அந்த ‘ங்க’ பொண்ணாச்சு!!! எனக்கு வேலை இருக்கு நான் கிளம்புறேன்! ஆனா இப்படி அதிகமா இடம் கொடுக்காதீங்கம்மா. சித்தி சொன்னாங்க சரி, ஆனால் நாம எதுக்கு இவளுக்கு எல்லாம் அட்ஜஸ்ட் செய்து போகனும்?”
“விடுப்பா! கொஞ்ச நாள் தானே...”
“சரி, நான் கிளம்புறேன்...!”
அஜய் வேகமாக கிளப்பி சென்ற கார் கண்ணில் இருந்து மறையும் வரை நின்று பார்த்து விட்டு, வாசல் கதவை தாளிட்டு, ரோஹினியை தேடி வந்தாள் சாரதா.
ரோஹினி அவள் விட்டு விட்டு சென்றிருந்த படி அதே கட்டிலில், அதே போஸில் அமர்ந்திருந்தாள்.
ஆனால் அவளின் முகம் அவள் ஏதோ யோசனையில் ஆழ்ந்திருப்பதை காட்டியது...
“ரோஹினிம்மா...”
சாரதாவின் அழைப்பில் யோசனையில் இருந்து வெளியே வந்த ரோஹினி,
“என்னால உங்களுக்கு ரொம்ப கஷ்டம்,” என்றாள் மொட்டையாக!
“கஷ்டமா? எனக்கு என்ன கஷ்டம்?”
“உங்க மகன்... அவரு சொன்னது என் காதிலேயும் விழுந்தது...”