இது எல்லாம் புரியவும், ரோஹினியின் மனம் சாரதாவின் அன்பினால் உருகிப் போனது!!!!
பார்த்து சில மணி நேரங்களே ஆகி இருந்தாலும், அவளுக்கும் சாரதாவின் மேல் தனி பாசமும், அன்பும் உருவானது!
சாரதாவிடம் அன்புடன் நடந்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்துக் கொண்டாள்!
ரோஹினி யோசனையில் ஆழ்ந்திருந்த நேரத்தில் பூ கட்டி முடித்திருந்த சாரதா, அதை எடுத்து ரோஹினியின் கூந்தலில் வைத்து விட்டாள்!
“ரொம்ப அழகா இருக்குடா,” என்று சாரதா சொல்லிக் கொண்டிருக்கும் போது வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது!
“இருடா ரோஹினிம்மா.. நான் வரேன்,” என்று சொல்லி சாரதா செல்ல, இந்த தடவை அதே இடத்தில் உட்கார்ந்து இருக்காமல் ரோஹினியும் சாரதாவை தொடர்ந்து நடந்தாள்.
வாசலில் இருந்த க்ரில் கதவிற்கு அப்பால் ஒரு பெண் நிற்பது தெரியவும், ரோஹினி பாதி வழியிலேயே தயக்கத்துடன் நின்றாள்!
நிரஞ்சனா வந்திருப்பதை கவனித்து புன்னகை மின்ன அவளுக்காக க்ரில் கதவை சாரதா திறந்து விட்டாள்.
“அத்தை என் டீ எங்கே...?” என்றுக் கேட்டபடி உள்ளே நுழைந்த நிரஞ்சனா, அங்கே ஹாலில் நின்று இருந்த ரோஹினியை கவனித்து பேச்சை பாதியில் நிறுத்தினாள்.
கிரில் கதவை சாத்தி வைத்து விட்டு வந்த சாரதா, ரோஹினி அங்கே நிற்பதையும், நிரஞ்சனாவின் பார்வை அவள் மீது இருப்பதையும் கவனித்து, “ரோஹினிம்மா, இது நிரஞ்சனா...” என்று ரோஹினியிடம் சொல்லி விட்டு, நிரஞ்சனாவிடம், “நிரு, நான் சொன்னேனே கெஸ்ட்... இது ரோஹினி,” என்றாள்.