அஜய்யின் ரியாக்ஷன் சாரதா மற்றும் விஜய்க்கு சுவாரசியமாக இருந்தது.
“என்னண்ணா அப்படிப் பார்க்குற??” என விஜய் கேட்டப் பிறகே ரோஹினியையே பார்த்துக் கொண்டிருப்பது அஜய்க்கு உரைத்தது!
பார்வையை திருப்பிக் கொண்டதுடன், சட்டென யோசித்து, “இல்லடா விஜய், நான் மத்தியானம் பார்த்ததுக்கு வேற ஹேர்ஸ்டைல்லா இருக்கேன்னு பார்க்கிறேன்,” என்று சொல்லி சமாளித்தான் அஜய்!
“ஹேர் ஸ்டைல் நல்லா இருக்கா அஜய்? நான் தான் ரோஹினிக்கு போட்டுக் கொடுத்தேன்,” என்றாள் சாரதா வாயெல்லாம் பல்லாக!
“அதானே பார்த்தேன்! என் அம்மா தவிர வேற யாரால இந்த மாதிரி மிராக்கில் (miracle) எல்லாம் செய்ய முடியும்? கலக்குறீங்கம்மா,” என அம்மாவிற்கு ஒரு கூடை ஐஸ் வைத்தான் அஜய்!
பேச்சை மாற்ற விரும்பிய நிரஞ்சனா, “உங்க அடுத்த ட்ரிப் எப்போ?” என அஜயிடம் கேட்க, அவள் விரும்பியதுப் போலவே பேச்சு வேறு பக்கம் திரும்பி சென்றது!
அதற்கு பிறகு அஜய் ரோஹினி பக்கம் பார்க்கவும் இல்லை... எதுவும் கேட்கவும் இல்லை...!
நேரம் மெல்ல நகர்ந்தது...
நிரஞ்சனா ஹாஸ்டலுக்கு கிளம்பி சென்று விட... அண்ணன், தம்பி இருவரும் தங்களின் அறைக்குள் தஞ்சம் புகுந்தனர்...
ரோஹினி இப்போதும் சாரதாவை நிழல் போல தொடர்ந்துக் கொண்டே இருந்தாள்....
சாரதாவிற்கும் அவளுடன் பேச்சு கொடுத்த படி வேலை செய்வது நன்றாக தான் இருந்தது...