“இது மட்டுமா தெரியலை? எதுவுமே தான் தெரியலை,” என்று எல்லோருக்கும் கேட்பதுப் போல முணுமுணுத்தான் அஜய்.
அவன் சொன்னதைக் கேட்டு ரோஹினியின் முகம் மீண்டும் வாடுவதும் அவனின் கண்ணில் பட தான் செய்தது!
“சும்மா இரு அஜய். இதுக்காக இங்கிலீஷ் படம் பார்க்கனும்னு இல்லை, தமிழ் படம் பார்த்தாலே போதும்! ஆனால் அதெல்லாம் அப்புறம், இப்போ எல்லோரும் முகத்தை கழுவிட்டு சாப்பிட வாங்க. இல்லைனா நம்ம வீடு வாக்கிங் டெட் (walking dead) மாதிரி இருக்கும்,” என்று சொல்லி விட்டு சென்றாள் சாரதா.
அம்மாவின் செல்லப் பிள்ளையாக விஜய் உடனே எழுந்து செல்ல, ரோஹினி அஜய் எழுந்து போகட்டும் என காத்திருந்தாள்.
அவனோ அசையாமல் கல்லுப் பிள்ளையார் போல உட்கார்ந்திருந்தான்
“உன் வீடு எங்கே இருக்கு?” என திடீரென்று அஜய் கேட்கவும், சாரதா அவனிடம் என்ன சொல்லி வைத்திருக்கிறாள் என்பது தெரியாமல், பொய் சொல்வதா, உண்மையை சொல்வதா என்று புரியாமல் குழம்பினாள் ரோஹினி.
“இதுக்கு கூட பதில் சொல்ல உனக்கு தெரியாதா??? ஆனால் பெட்டியை தூக்கிட்டு வான்னு மட்டும் சொல்ல தெரியும்???!!!!!”
“உங்க கிட்ட பெட்டியை தூக்க சொன்னது தப்பு தான். மன்னிச்சுக்கோங்க,” என்றாள் ரோஹினி!
“ஹலோ! சொல்றதையும் சொல்லிட்டு, என்னை வெயிட் தூக்கவும் வச்சுட்டு, இப்போ இப்படி ஸ்டைலா மன்னிச்சுக்கோங்கன்னு சொன்னா, எல்லாம் சரியா போயிடுமா?”
அஜய் ‘மன்னிச்சுக்கோங்க’ வை பெண் குரலில் சொல்வதை அதிசயமாக பார்த்தாள் ரோஹினி.