Chillzee Originals : தொடர்கதை - இதயத்திலே ஒரு கனவு - 01
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
ஜெய் தன் மொபைலில் ஐந்தாவது முறையாக நேரம் பார்த்தான். புவனேஸ்வரி இன்று லேட்! இதுவரை அவள் ஒருத் தடவை கூட இப்படி லேட்டாக வந்தது கிடையாது.
பொறுமை இல்லாதவனாக பெஞ்சில் அமர்ந்திருந்தப் படியே அவனையும் அறியாமல் கால்களை ஆட்டினான். நேரம் ஏன் இப்படி நத்தை வேகத்தில் செல்கிறது என்பதை தாண்டி வேறு எதையாவது யோசிக்க முயன்றான்.
அவனும் புவனேஸ்வரியும் எப்போதும் சந்திக்கும் இடம் அது! அவன் அமர்ந்திருந்த பெஞ்ச் மென்மையான இளஞ்சிவப்பு பூக்கள் மலர்ந்து மணம் வீசும் புதர்களின் பின்னால் மறைக்கப்பட்டிருந்தது.
வெட்கப்படும் போது புவனேஸ்வரியின் முகமும் இதே பூக்களின் நிறமாக தான் மாறும்.
தலையை ஆட்டிக் கொண்டு வேறு பக்கம் பார்க்க முயன்றான். இந்த பூக்கள் புவனேஸ்வரியை பற்றியே யோசிக்க வைக்கிறது! எதைப் பார்த்தாலும் அவனுக்கு அவள் நினைவு தான் வருகிறது! அவள் வந்தால் மட்டுமே அவனால் இயல்பாக இருக்க முடியும்.
ஜெய்யின் விரல்கள் மீண்டும் மொபைல் பக்கம் தானாக சென்றன. ஆனால் பக்கத்தில் கேட்ட இலைகள் மிதிப்படும் காலடிச் சத்தம் ஆறாவது முறையாக டைம் பார்க்கும் வேலையில் இருந்து அவனை காப்பாற்றியது!
காலடி ஓசைக் கேட்டப் பக்கம் திரும்பியப் போது காற்றில் சிலுசிலுத்துக் கொண்டிருந்த அவனது தலைமுடி அவனின் கண்களில் வந்து விழுந்தது. அவன் அதை பற்றிக் கவலைப் படவில்லை. இந்த உலகில் அவனுக்கு பிடித்த காட்சி அவனின் எதிரே தெரிந்தது.