Chillzee Originals : தொடர்கதை - இதயத்திலே ஒரு கனவு - 02
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
பத்து வருடங்களுக்கு பிறகு.
பரமசிவம் மீசையை முறுக்கிக் கொண்டே நடந்தார்.
“ஊரெல்லாம் போஸ்டர் அடிச்சாச்சா? என் ஃபோட்டோ தெளிவா இருக்கா? என் பேரு தொலைவுல இருந்தும் தெரியனும்.”
இவர் ‘பந்தா’ பரமசிவம் என்பது அவர் பேசிய பேச்சில் இருந்தே தெள்ள தெளிவாக தெரிந்திருக்கும்!
அந்த பந்தா பரமசிவம் முழு மேக்கப்புடன் காரில் ஏறினார். “எடுறா வண்டியை,” என்ற அவரின் கட்டளைக்கு அடிப்பணிந்து உடனடியாக காரை கிளப்பினான் டிரைவர்.
“கோவில் எதிருல இருக்க ஃப்ளக்ஸ் போர்ட் பக்கத்துல ஒரு நிமிஷம் நிறுத்து!” அடுத்த கட்டளையும் நிறைவேற்றப்பட்டது.
காரில் இருந்துக் கொண்டு தன் ஃபோட்டோவை பார்த்து ரசித்தார் பரமசிவம். போஸ்டரில் கொடை வள்ளல் என்று அவருக்கு கொடுக்கப் பட்டிருந்த பெயர் அவருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.
“வாங்குன காசுக்கு நல்லா வேலை செய்திருக்கான்.” தனக்கு தானே சந்தோஷப் பட்டுக் கொண்டார் பரமசிவம்.
அந்த ஊரில் புதிதாக திறக்கப்படும் டிபார்ட்மென்ட்டல் ஸ்டோரை ஊர் பெரியவர் என்ற முறையில் பரமசிவத்தை திறக்க சொல்லி கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவ்வளவு தான் பரமசிவத்திற்கு உச்சிக் குளிர்ந்துப் போனது. தன் சொந்த செலவில் அவருக்கே போஸ்டர் அடித்தது மட்டுமல்லாமல் கடை திறப்பிற்கு வரும் அனைவருக்கும் உணவு கொடுக்கவும் அவரே ஸ்பான்சர் செய்திருந்தார்.