நிஷா அவளை பக்கத்தில் வா என்று அழைக்க கூட இல்லையே...! மித்ரன் வந்தால் அம்மா கூடவா அவளுக்கு வேண்டாம்???
அந்த நினைப்பே சரண்யாவை என்னவோ செய்தது...!
சரண்யா ஒதுங்கி நிற்பதை கவனித்த நளினி,
“மித்ரா, நீ அந்த பக்கம் போ... சரண்யா வா, வந்து நிஷா பக்கத்தில நில்லு,“ என்றாள்.
அம்மா சொன்னதற்காக மறுபக்கம் செல்ல மித்ரன் நகர, நிஷா அவனின் கைகளை பிடித்து தடுத்தாள்.
“மித்ரன்... இரு... அம்மா... இங்கே,” என்று அடுத்த பக்கத்தை காட்டினாள் நிஷா...
மித்ரன் சரண்யாவை பார்த்தான்..
அவள் அவனுக்கு சூடாக ஒரு முறைப்பை கொடுத்து விட்டு, நிஷாவின் இன்னொரு பக்கம் சென்று நின்றாள்...
சரண்யா அவனை பார்த்து முறைக்கிறாள்!!!! எல்லாம் நேரம் தான்...! என்று நினைத்துக் கொண்ட மித்ரனுக்கு சிரிப்பு தான் வந்தது...
ஆனால் நிஷா மீதான சரண்யாவின் பாசமும், பற்றும் அவனால் புரிந்துக் கொள்ள முடிந்ததால், அவளை வெறுப்பேற்றாமல் கேக் கட் செய்யும் போது நிஷாவின் கைகளை பிடிப்பது, முதல் கேக் பீஸ் சாப்பிடுவது என அனைத்தையும் அவளுக்கே விட்டுக் கொடுத்தான்(!!!!).
ஹாப்பி பர்த்டே பாடல் பாடிய படி மைத்ரேயி தன் மொபைலில் ஃபோட்டோ எடுக்க, சரண்யா நிஷாவின் கையை பிடித்து வெட்டிய கேக் துண்டுகளை அனைவருக்கும் கொடுத்தாள்...