Chillzee Originals : தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 33 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
விமலுக்கு திருமணம் நிச்சயமானதும் கமல் செலவு செய்து கட்டிய போர்ஷன் தான் அது. ஆனால் தேவைக்கு அதிகமாக கமல் அங்கே வந்தது இல்லை. விமலிடம் மற்ற குடும்பத்தினரை போலவே அவனுக்கு அதிக பிணைப்பு இல்லை, ரோஷனியை அவனுக்கு பெயரளவில் தெரியும், அவ்வளவு தான்! அவளுடன் அதிகம் பேச வேண்டிய அவசியமோ வாய்ப்போ அவனுக்கு இருந்ததில்லை! அதை எல்லாம் சுமி பார்த்துக் கொண்டாள்!
மனதில் தானாக பாரம் ஏற, சாத்தி இருந்த விமலின் அறைக் கதவை மெல்ல தட்டி விட்டு, அது திறக்க காத்திருந்தான்... ஒருவரும் வரும் அரவம் கேட்கவில்லை...
ஒரு நிமிடம் காத்திருந்து விட்டு, கதவை மெல்ல அவன் அசைத்துப் பார்த்த நேரம், உள்ளிருந்து பேச்சுக் குரல் கேட்டது...
“...இவ்வளவு நாள் தனியா போன்னு நான் சொன்னப்போ எல்லாம் சுமித்ராவே எல்லாம் செய்றா, செய்றா நான் ஃப்ரீயா இருக்கேன்னு சொல்லிட்டு இருந்த... இப்போ அவளே இல்லை... இனி நீ இங்கே இருந்தா, எல்லாம் உன் தலையில தான் வந்து விழும்... உனக்கெதுக்கு இந்த தேவை இல்லாத பொறுப்பு எல்லாம்??? அவர்ட்ட பேசி சீக்கிரமா வேற வீடு பார்த்துட்டு போற வழியை பாரு!”
பேசுவது யார் என்று கமலுக்கு தெளிவாக தெரியவில்லை ஆனால் ரோஷனியின் அம்மாவோ வேறு உறவோ என்பது மட்டும் புரிந்தது! சுமித்ராவின் பெயரும், அவள் இல்லை என்ற குறிப்பும் கமலின் கோபத்தை கிளறியது! அவன் என்ன செய்திருப்பானோ, அதற்குள்,
“என்னம்மா இப்படி மனசாட்சியே இல்லாம பேசுறீங்க?” என்ற ரோஷனியின் பதில் அவனின் கேட்டது!
அங்கேயே தொடர்ந்து நிற்கவும், அவர்களின் பேச்சை கேட்கவும் கமலுக்கு தயக்கமாக இருந்தது! உள்ளே ரோஷனியும், அவளின் அம்மாவும் பேச்சை தொடர்ந்துக் கொண்டிருந்தார்கள்.
“எனக்கா??? என்ன பேசுற நீ?”