காதில் விழுந்த ரோஷனியின் வார்த்தைகள் கமலுக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்தது... அவனின் மனதை இளக்கவும் செய்தது! ரோஷனிக்கும் சுமி மீது இவ்வளவு பாசம் இருக்கிறதா???
யாருக்கு தான் சுமி மீது அன்பில்லாமல் போகும்? அவள் ஒரு தேவதை!
மனம் மனைவியின் பக்கம் போகவும், அதற்கு மேல் அங்கே நிற்க கமலுக்கு விருப்பம் இருக்கவில்லை! யோசனையுடனே மாடி ஏறி தன் அறைக்கு சென்றான்.
✽✽✽
யோசித்து யோசித்து கமலுக்கு குழப்பமாக இருந்தது..
ரோஷனிக்கு உண்மையிலேயே ரேஷ்மி மீது அக்கறை இருக்கிறது என்பது அவனுக்கு புரிந்தது... மற்றபடி அவளை தன் மகளாக வளர்ப்பதில் ரோஷனிக்கு எந்த ஆதாயமும் இல்லை... ரோஷனியின் அம்மா சொன்னது போல அது கூடுதல் பொறுப்பு மட்டுமே..!
ஆனால் அதற்காக தன் மகளை ரோஷனியின் பாதுகாப்பில் விட்டு விடவும் அவனுக்கு மனம் வரவில்லை...
மகளை நல்ல விதமாக வளர்க்கும் பொறுப்பு அவனுக்கு இருக்கிறது... அதை பற்றி சுமியிடம் சத்தியம் வேறு செய்துக் கொடுத்திருக்கிறான்.
என்ன இருந்தாலும் பெற்றவர்கள் போல மற்றவர்களால் வளர்க்க முடியுமா?
அதற்கு அவனே ஒரு உதாரணம் தானே... அவனுடைய சொந்த அம்மாவின் அம்மா வீட்டில் வளர்ந்திருந்தாலும் கூட அது அவனுக்கு வேறுபட்ட அனுபவமாக தானே இருந்தது...!
ஒரு முடிவுக்கு வந்தவனாக, இருள் சூழ தொடங்கிய நேரத்தில் பூங்கோதையை தேடி சென்றான்.