“அம்மா, ரேஷ்மிக்கு கொடுக்க சாதம் எடுத்து கொடுங்க... நான் அவளுக்கு ஊட்டி விடுறேன்..”
பூங்கோதையால் நம்பவே முடியவில்லை. ஆனாலும் ஒரு வார்த்தையும் சொல்லாமல், அவன் கேட்டது போலவே சாதத்தை எடுத்து பிசைந்து அவனிடம் கொடுத்தாள்.
ஹாலில் இருந்த ஷோஃபாவில் சுருண்டு படுத்திருந்த மகளை ஒரு கையில் அள்ளிக் கொண்டவன், மாடிக்கு சென்றான்.
அங்கே அவளை இறக்கி விட்டு விட்டு,
“பாப்பா, சாப்பிடலாமா?” என்றுக் கேட்டான்.
கண்களில் கண்ணீர் மின்ன வேண்டாம் என்று தலை அசைத்தாள் குழந்தை.
“ஏன் வேண்டாம்?”
“என்க்கு அம்மா வேணும்...”
கூரான வலி அவனுள் பரவியது. அவனுக்கும் கூட தான் சுமி வேண்டும்...
“பாப்பா, சாப்பிட்டா அம்மா வருவாங்க...”
“பொய். இப்படி தான் நேத்து சித்தி சொன்னாங்க ஆனா அம்மா வர்லை. எனக்கு அம்மா வேணும்.”
“அம்மா நம்ம கூட தான் இருக்காங்க பாப்பா... நம்மால அவங்களை பார்க்க முடியாது, ஆனா அவங்க நம்ம பக்கத்திலேயே இருந்து பார்த்துட்டே இருப்பாங்க.”
“ஹுஹும் பொய். அம்மா என்க்கு தெரியாம அப்படி இருக்க மாட்டாங்க.”