“சுமித்ரா உங்க கிட்டயும் எவ்வளவு பாசமா இருப்பாங்க... அம்மா அம்மான்னு எப்படி உங்களை உபசரிப்பாங்க... பாவம்மா அவங்க...”
ரோஷனி சுமித்ராவை பற்றிய பேசிய விதம் மனதிற்கு இதத்தை கொடுக்க, என்ன செய்வது என்ற எண்ணமே இல்லாமல் அங்கேயே அசையாமல் நின்றான் கமல். உள்ளிருந்த உரையாடல் அவன் இருப்பது தெரியாமல் தொடர்ந்துக் கொண்டே இருந்தது!
“அதுக்காக நீ அவ குழந்தையை வளர்க்க முடியுமா? நீ, உன் கணவன், உன் குழந்தைன்னு இருக்குறது தான் புத்திசாலித்தனம்!”
“இந்த நேரத்துல இப்படி எல்லாம் பேச உங்களுக்கு எப்படிம்மா மனசு வருது?”
“ப்ச்... உனக்கு என்ன ஆச்சு? எதுக்கு இப்படி பேசுற?”
“சுமித்ரா எனக்காக எவ்வளவு விட்டுக் கொடுத்திருக்காகன்னு சொன்னா உங்களுக்கு புரியுமான்னு எனக்கு தெரியலை... பாவம்மா ரேஷ்மி... சின்ன குழந்தை... என்னால அவ அம்மா இடத்தை முழுசா நிரப்ப முடியுமான்னு எனக்கு தெரியலை... ஆனால், அந்த குழந்தை எல்லோரையும் விட்டுட்டு அம்மா புடவை மாதிரி இருக்கேன்னு என் கிட்ட வந்தா பாருங்க, இன்னமும் என் மனசை அடைக்குது... என்னால முடிஞ்ச அளவுக்கு அவளோட அம்மாவா இருக்க முயற்சி செய்ய போறேன்.”
“என்ன சொல்ல வர நீ??? நீ பேசுறது உனக்கு புரியுதா? இது விளையாட்டு விஷயம் கிடையாது... நீ வேலைக்கு போகனும்...”
“கவிதாவும், அத்தையும் ஹெல்ப்பா இருப்பாங்க... வேணும்னா வேலைக்கு ஆள் கூட வச்சுக்கலாம்... பிடிக்குதோ இல்லையோ, இது தான் என் வீடு... ரேஷ்மி இனி என் பொண்ணு... இதை பத்தி எல்லாம் நான் இவ்வளவு நேரம் யோசிக்க கூட இல்லை... இப்போ நீங்க கேட்டதும் தான் எனக்கே தோணிச்சு!"