அதனால தைரியமா பேசுறான். நீ கஷ்டம்னா என்னன்னே தெரியாம வளர்ந்தவ. உன்னை அதே மாதிரி பார்த்துக்குற பொறுப்பு அவனுக்கு வந்தா அவன் வாழ்க்கை இப்போ போல அப்படியே இருக்குமா?”
புவனேஸ்வரிக்கு சித்ரா சொல்வது புரிவது போல தான் இருந்தது!
“பதினேழு பதினெட்டு வயசுல படிப்பை தாண்டி எதையும் யோசிக்க வேண்டிய அவசியமே கிடையாது பாப்பா. கல்யாண வாழ்க்கைங்குறது தேனாறும் பாலாறும் ஓடுறது கிடையாது. உன் அம்மாவை யோசிச்சு பாரு. அழகு, பணம், எல்லாம் இருந்தது. என் அண்ணனை கல்யாணம் செய்து என்ன சந்தோஷப்ப்பட்டாங்கன்னு நினைக்குற? எங்க வீட்டுல எல்லாம் இருக்கு ஆனா குழந்தைன்னு ஒரு செல்வம் இல்லை.”
“நான் உங்க குழந்தை தான் அத்தை!” சித்ரா வருத்தப் படுவது பொறுக்கமுடியாமல் அவளை அணைத்துக் கொண்டாள் புவனேஸ்வரி.
தன்னுடைய சொந்த வாழ்க்கையை மாற்றும் விஷயம் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போதும் அத்தையின் வருத்தத்தை தாங்க முடியாத புவனேஸ்வரியின் அன்பு சித்ராவை நெகிழ்த்தியது. அவளை பாசத்துடன் வருடினாள்.
“இந்த சின்ன வயசுல காதல், கல்யாணம்னு மனசை அலைப்பாய விட்டா வாழ்க்கை முழுக்க அதுவே சுமையா போயிடும் பாப்பா. உனக்கு மட்டுமில்லை ஜெய்க்கும் அப்படி தான். நீ குழந்தை ஆனால் புத்திசாலி. இப்படி செய், அப்படி செய்ன்னு நான் உனக்கு சொல்லனும்னு அவசியம் கிடையாது. பொறுமையா யோசி. இதெல்லாம் சரியா வருமா? நடைமுறைக்கு சாத்தியமா? யோசி. உன் முடிவினால நம்ம எல்லோருடைய வாழ்க்கையிலையும் ஏற்படப் போற மாற்றம் பத்தியும் யோசி!” சித்ரா மிகவும் பொறுமையாக பேசினாள்.