எல்லாம் பேசிட்டேன். எதுக்கும் புவனேஸ்வரி கொஞ்ச நாள் வேலை செய்து பார்த்துட்டு முடிவு செய்யலாம்னு நினைச்சேன். அவ திறமை பார்த்து அவனே அசந்துப் போயிட்டான். லீகல் வேலை எல்லாம் முடிச்சு, பூஜை போட நாள் பார்த்துட்டு, நாங்களே வீட்டுக்கே வந்து எல்லோரையும் கூப்பிடுறோம்.”
சுரேஷ் சொன்னதைக் கேட்டு ராஜேஸ்வரி தன் காதுகளில் இருந்து வந்த புகையை அடக்க அரும்பாடு பட்டாள்.
மாமா சொன்ன தகவல் புவனேஸ்வரிக்கே புதிது என்பதால் அவள் குழப்பத்துடன் அத்தையை பார்த்தாள். சித்ரா அமைதியாக இருக்குமாறு சைகை செய்யவும் அப்போதைக்கு எதையும் புவனேஸ்வரி கேட்கவில்லை.
பின்னர் சுரேஷுடன் காரில் வேலைக்குப் போகும் போது தயக்கத்துடன் அந்த பேச்சை எடுத்தாள்.
“அக்காக்காக அப்படி சொன்னீங்களா மாமா? அவ எப்போவும் அப்படி தானே பேசுவா. நான் அதை கண்டுக்குறது கிடையாது.”
“தப்பு பாப்பா. திறமையே இல்லாதவங்களை கூட தட்டிக் கொடுத்து முன்னேற வைக்கனும். உன் அக்கா திறமை இருக்க உன்னை மட்டம் தட்டி பேசுறது சரியே கிடையாது. நான் சொன்னது சும்மா இல்லை. உண்மையை தான் சொன்னேன். இது ரொம்ப சின்ன கம்பெனி பாப்பா. நமக்கு இது ஒன்னும் கிடையாது. உனக்கு ட்ரெய்னிங் கொடுக்க ஆருத்ரா கிட்ட சொல்லி வச்சிருந்தேன். அவ உன்னைப் பத்தி புகழ்ந்து தள்ளிட்டா. ரொம்ப நல்லப் பொண்ணு.“
“என்ன மாமா என்னை பத்தி புகழ்ந்ததால ஆருத்ராவை நல்லவன்னு சொல்றீங்க?” புன்சிரிப்பு நிறைந்த முகத்துடன் கேள்வி கேட்ட புவனேஸ்வரி சுரேஷிற்கு புதியவளாக இருந்தாள்.