(Reading time: 44 - 88 minutes)

வளையே அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தவன் கண்களில் அவள் முன்னாடி போட்டிருந்த நெடிய பின்னலிட்ட கூந்தல் தென்பட்டது. அதைப் பார்த்து வியந்து, பூமாவிடம் கேட்க திரும்ப குணாவும் பூமாவும் அவனையே குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் பார்வைக்கு அர்த்தம் புரியாமல் கேட்க, “நீங்க அரை மணி நேரமா அந்த போட்டோல என்ன இருக்குன்னு அப்படி பாக்குறீங்க?” பூமா கேட்டாள்.

 

“வெல்” என்று சொல்லிக் கொண்டே பான்ட் பாக்கட்டுக்குள் கையை விட்டபடி, மறுபடியும் ஒரு முறை அந்த புகைப்படத்தை சந்தியாவை தவிர்த்து சுற்றி உள்ளவற்றை ஒரு பார்வை விட்டவாறு அவர்களிடம் திரும்பி “லொகேஷன் நல்லாயிருக்கு அதான்” என்றான் தோளைக் குலுக்கிய படி, புருவத்தை உயர்த்தி தலையை சரித்து ஸ்டைலாக சொன்னான்.

 

“ஊட்டி, கொடைக்கானல்ல ரேஞ்சுக்கு சொல்றீங்க. அது எங்க வீட்டு மொட்டை மாடி” , கிண்டலடித்தாள் பூமா.

 

“எனக்கு போட்டோக்ராபி ரொம்ப பிடிச்ச விஷயம். நாம தினமும் பாக்கிறப்ப ஒன்னுமே இல்லைன்னு தோணுற விஷயங்கள் பத்து வருஷம் கழிச்சு போட்டோவா பாக்கிறப்போ பிரமிப்பா தெரியும். இந்த படம் திறமையான போட்டோகிராபி பிக்சர் கிடையாது தான். ஆனா இதுல எவ்வளோ இன்பர்மேஷன் இருக்கு பேக்கிரவுண்ட்ல பாருங்க சின்னதா நம்ம ஊரு சிவன் கோவில் கோபுரம் தெரியுது, பச்சை கலர்ல செக்கால் ஊரணி, அப்புறம் இப்போ நாம பாக்கவே முடியாத ஓட்டு வீடுகள், அங்கங்கே வேப்ப மரம், சில பழைய காலத்து வீடுகள், ஏதோ ஒன்னு ரெண்டு அடுக்கு மாடி வீடு, டிவி ஆண்டெனாக்கள்….இப்படி எத்தனை விஷயம் இதே இடத்தில் இப்போ பாக்க முடியும்? என்னோட கெஸ் படி இந்த பிக்ச்சர் ஒரு எட்டு வருஷத்துக்கு முன்னாடி எடுத்திருக்கணும்.” என்று ஒரு பெரிய பாடமே நடத்தி விட்டு தான் கணித்து வைத்ததை சொன்னான்.

 

அவன் சொன்னதை கேட்டு மேச்சுதலான பார்வை வீசி, குரலில் வியப்பைக் காட்டிய பூமா, “எக்ஸாக்ட்லி! எட்டு வருஷத்துக்கு முன்னாட்டி எடுத்தது. இப்போ கோவில் கோபுரத்தை கூட ஒரு பெரிய பில்டிங் மறைச்சிடுச்சு. ஆனா எதை வச்சு சரியா சொல்றீங்க?” கேட்டாள் .

 

“என்ன பண்றது என் தொழிலே அதானே....ஐ மீன் ப்ரிடிக்ஷன் “ என்று உதட்டோரம் சிறிதாக புன்னகைத்தவன், “அந்த செக்கால் ஊரணி போட்டோல தெரியுற அளவுக்கு நிறைந்தது எட்டு வருஷத்துக்கு முன்னாடி தான்! அதுக்கு அப்புறம் ரெண்டு மூணு வருசம் மழையில்லாம வத்தி போயி இப்போ சின்ன வாய்க்கால் சைஸ்சுக்கு மாறி சுத்தி வீடுகளாயிடுச்சே! ஹம்...அதை வச்சு தான் கெஸ் பண்ணேன். “

 

சொல்லும் பொழுது அவனுக்கு சிவாவின் தொலைபேசி அழைப்பு வந்தது.

 

ந்தியாவின் வீட்டில் வடிவின் கடுஞ்சொற்கள் தாங்காது மயங்கி சரிந்த லக்ஷ்மியை, ஸ்ரீமா தாங்கிப் பிடிக்க முயன்று கடைசியில் மடியில் தாங்கினாள். அதே நேரம் தருணின் அழுகுரல்.

 

கருவில் சுமந்த தாய் குழந்தையாய் மடியில் கிடக்க, கருவில் சுமந்த குழந்தையின் அழுகுரலை கேட்டு பதறிய ஸ்ரீமா, “தருண் முழிச்சிட்டான். ஓடிப் போய் தூக்கு சந்து. மாடியில் இருந்து கீழ உருண்டு விழுந்துட போறான்”, கவனம் மடியில் உள்ள குழந்தை மேல் இருந்தாலும், உதடுகள் மாடியில் உள்ள குழந்தையை கவனிக்க வேண்டுமே என தங்கையிடம் கட்டளையிட்டது.  

 

அக்கா சொல்லி முடிக்கும் முன், தருணை தூக்கி தற்காலிக தாயாகி, அவனை தோளில் போட்டு தட்டிக் கொடுத்தாள். சஷ்டிக் கவசத்தை தாலாட்டாக பாடிய படி குறுக்கும் நெடுக்கும் மெதுவாக நடை போட்டாள். சந்தியாவின் தோள்பட்டையில் முகத்தை உரசி சிணுங்கி விட்டு சில நொடிகளில் அமைதியாகி கண்களை மூடி மீண்டும் தூங்கினான் தருண். அவன் தூக்கம் கலைந்து விடாத படி பொத்தினாற் போல் தொட்டிலில் போட்டு மெதுவாக ஆட்டும் போது, அவளை அழைத்த படி அங்கு வந்து நின்றாள் பக்கத்து வீட்டு ஜெயா. பிறந்து வளர்ந்தது கேரளா என்பதால் ஜெயாவின் பேச்சில் மலையாள வாடை வீசும்.

 

சற்று மெல்ல பேசுமாறு சைகை காட்டிய சந்தியாவிடம் “அவர் ஹாஸ்பிட்டல் போகும். ஞாந் நிந்ர கூட இங்க இருக்கும்.” என்றாள் ஜெயா மலையாளத் தமிழில், இரகசியமாக.

 

“கிளம்பிட்டாங்களா சேச்சி?.அம்மாவை அந்த நிலைமையில் பாக்க முடியலை”. மெலிதாக சொன்னவளின் குரல் உடைந்தாலும், முகத்தில் மழையை இறக்கப் போகும் கருமேகம் போல சோகம் அப்பிக் கிடந்தாலும், கண்ணீர் வரவில்லை. “அம்மாக்கு ஒன்னும் ஆகாது. என் முருகன் அம்மாவை கைவிட மாட்டான்” என்று சொல்லிக் கொண்டே தொட்டிலை இறுக பிடித்த கைகள் அவளின் நம்பிக்கையையும் வெளிபடுத்தியது.

 

“அதே! சேச்சிக்கு ஒன்னும் ஆகாது. டோன்ட் வொர்ரி.” என்று ஆறுதல் சொல்லி விட்டு பின், ஏதோ பேசினாள். கலகலப்பாக வெகுளியாக பேசும் ஜெயாவை சந்தியாவிற்கு மிகவும் பிடிக்கும். ஆனால் இன்றோ எதுவும் காதில் விழவில்லை. மனமோ வேண்டிதலை நிறுத்தவுமில்லை.

 

ஜெயா கணவரின் காரில் லக்ஷ்மியை அழைத்துச் செல்ல முடிவானதால், சந்தியாவிற்கு துணைக்கு ஜெயாவை விட்டுச் சென்றனர். சுற்றி நடப்பதை பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் பாண்டியனும், வடிவுக்கரசியும் தங்கள் பையை கட்டி ஊருக்கு கிளம்புவதில் குறியாக இருந்தனர். வடிவை காரில் உட்கார வைத்து விட்டு, பையை எடுக்க வீட்டிற்குள் நுழைந்தவன் முன் பையை வீசி எரிந்து “இடத்தை காலி பண்ணு” என அவனை நிமிர்ந்து கூட பார்க்காமல் எரிச்சலாய் பொரிந்து கொண்டே, மாடிப் படியருகே வந்த தன்ராஜ் “ஜெயா வந்து கதவை பூட்டிக்கோம்மா” என்று குரல் கொடுத்தார். அவள் இறங்கி வருவதை பார்த்து விட்டு அவசரமாக காரில் ஏறினார். அவர் சென்றதும் பையை எடுக்காமல் படியில் ஏற வந்த பாண்டியன் முன் எதிர்பட்ட ஜெயா,

 

“எந்தா காரியம்? எந்தா வேணும்?” கடைசி படியில் நின்ற படி அதிகாரமாக கேட்டாள் .

 

அவனோ அவளை சட்டை செய்யாமல் எரிச்சலாய் பார்க்க,

 

“நிங்களுக்கு ஞான் பரஞ்சது மனசில்லகுன்னிள்ளே “ என்று தான் சொல்வது புரியவில்லையா மிரட்டினாள் ஜெயா.

 

அவள் மிரட்டுவது இன்னும் கோபத்தை அதிகரிக்க,

 

“என்னை மிரட்டுறியா? பல்லை உடைச்சிடுவேன் ராஸ்கல்” பதிலுக்கு மிரட்டினான் பாண்டியன். சத்தம் கேட்டு, தருண் தூங்குவதை உறுதி செய்து கொண்டு, மாடியிலிருந்து இறங்காமல் படியருகே நின்ற சந்தியா,

 

“மாமா உங்களுக்கு என்ன சொல்லனுமோ அங்கயே நின்னு சொல்லிட்டு போங்க. உங்க பூச்சாண்டிக்கு எல்லாம் யாரும் பயப்பட மாட்டாங்க.“ நிதானமாக பேசினாலும் தன் அழுத்தத்தை குரலில் காண்பித்தாள்.

 

அவள் பார்வையில் இருந்த கர்வம், செயலில் இருந்த நிதானம், பேச்சில் இருந்த தைரியம் அவனை காட்டுமிராண்டியாக்கிக் கொண்டிருந்தது. “நான் பூச்சாண்டி காமிக்கிறேனா? அழகாயிருக்கோம்ன்னு திமிரா? உன்னை ஒரு கழிசடை கூட சீண்டிப் பாக்க முடியாத படி உன்னையும் உங்கப்பனையும் கதறடிக்க வைக்கலை நான் பாண்டியன் இல்ல. தெரிஞ்சிக்கோ” கண்களில் அனல் கக்க வெறிப் பிடித்தவன் போல சந்தியாவை பார்த்து கர்ஜித்தான்.

 

அதை கொஞ்சம் கூட சட்டை செய்யாமல் அவன் முன் நின்ற வெகுளிப் பெண் ஜெயா, “ஓ…...” கன்னத்தில் ஒற்றை விரலை வைத்து ராகமாய் பாடினாள். “பாண்டிக்காரன்?? எனிக்கு அறியுமே... குட் ஜோக் பறஞ்சு. தயவு ச்செய்து சிரிச்சிடு சந்து. அப்போ தான் பாண்டிக்காரன் ஊருக்கு போகும்” என்று கிண்டலடித்து சந்தியாவைப் பார்த்து கல கலவென சிரித்தாள். பாண்டியன் பெயரை அவள் புரிந்து கொண்ட விதத்தில் சந்தியாவிற்கும் சிரிப்பு வர புன்முறுவலித்தாள்.

 

அவள் ஏளனமாக சிரிப்பதாக எண்ணிய பாண்டியனின் வெறி இன்னும் அதிகமாக சந்தியாவை பார்த்து சிரித்து விட்டு திரும்பிய ஜெயாவின் கழுத்தை படக்கென ஒரு கையால் அழுத்திப் பிடித்து நெரித்து, “இன்னொருக்க சிரிச்சே உடம்புல உயிர் இருக்காது” பல்லைக் கடித்த படி அவளை மிரட்டி விட்டு, திமிறியவளை பற்றியிருந்த கையாலே ஒரு தள்ளு தள்ளி, பையை எடுத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு அகன்றான்.

 

வன் தள்ளிய வேகத்தில் படியில் பின்புறமாக விழுந்த ஜெயா, தொண்டையை பிடித்த படி இருமிக் கொண்டே திணறினாள். எல்லாம் சந்தியா சுதாரிக்கும் முன் நொடிப்பொழுதில் நடந்து முடிக்க, அதிர்ச்சியும் பயமும் கலந்த முகத்தோடு அதிவேகமாக படிகளில் இறங்கி அவளருகில் அமர்ந்தவள் ஜெயாவின் தொண்டையை தடவிய படி “சாரி சேச்சி...தொண்டை இன்னும் வலிக்குதா? தைலம் போடட்டா? இல்லை ஆஸ்பத்திரி போலாமா?” பயம், கவலை, அக்கறை என பல உணர்ச்சி கலவையாய் கேட்டாள் சந்தியா.

 

தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட ஜெயா, “டோன்ட் வொர்ரி சந்து. அதெல்லா ஒன்னும் இல்லா. சேச்சிக்கு டாக்டர் எந்தா பரஞ்சதோ?” மறுபடியும் லக்ஷ்மியைப் பற்றிய கவலையில் கேட்டாள் ஜெயா.

 

“ஒரு பத்து நிமிஷம் கழித்து போன் பண்ணலாம் சேச்சி. அம்மா இருந்த நிலையில அந்த அரக்கன் கிளம்பாததை அப்பா கவனிச்சு இருக்க மாட்டாங்க. இல்லாட்டி அவனை கழுத்தை பிடிச்சு வெளில தள்ளிட்டு தான் வேற வேலை பாத்திருப்பாங்க. அண்ணாக்கு தெரிஞ்சா….” அம்மாவிற்காக கலங்கியவள் இப்போது தனக்கு துணைக்கு வந்த ஜெயாவை நினைத்து வருந்தினாள். தனக்கு இது ஒன்றும் பெரிய பிரிச்சனை இல்லை என்று ஜெயா சொல்லிக் கொண்டிருக்கும் போது, சந்தியாவின் தொலைபேசிக்கு அழைத்தது. சத்தம் கேட்டதும், “ஸ்ரீமாவாக இருக்கும்” என சொல்லிக் கொண்டே எழுந்தவளுக்கு படியில் அமர்ந்திருந்த ஜெயா சற்று விலகி வழி விட, ஓடிப் போய் தொலைக்காட்சி பெட்டியின் அருகே இருந்த போனை எடுத்தவளிடம் பேசியது சிவா.

 

“சிஸ்டர், கார்த்திக் மாமாவை பிடிக்க முடியலை. ப்ளான் பி வொர்க் அவுட் பண்ண முடியலை. அவரோட பெர்சனல் நம்பர் கார்த்திக்கிட்ட பேசி வாங்கணும். இந்த நேரம் பார்த்து எனக்கு ஒரு துஷ்டி வீடு. நெருங்கிய சொந்தம். நீங்களே பேதி மருந்து இந்த மாதிரி ஏதாவது குடுத்து பாண்டியனை சமாளிச்சிடுங்க சிஸ்டர். ப்ளீஸ்” என்றான் சிவா.

 

“அது என்ன ப்ளான் பி? கார்த்திக் மாமா யாரு?” இதற்கு முன் சிவா சொன்ன பொழுதே அவள் கேட்க நினைத்த கேள்விகள் இப்போது கேட்டாள்.

 

“கார்த்திக் அவங்க அம்மா ஒரு பெரிய குடும்பத்தில இருந்து வந்தவங்க. கார்த்திக் எக்ஸ் கவர்னரோட கொள்ளுப் பேரன். அவன் தாத்தா கோட்டைல தலைமைச் செயலரா இருந்தவங்க. அவன் பெரிய தாத்தா சென்ட்ரல் மினிஸ்டரா இருந்தவர். அதே வழியில் அவங்க மாமா. அவர் சென்னை சிட்டில ஒரு பெரும்புள்ளி. அவருக்கு போலீஸ்ல இருந்து பொறுக்கி வரை எல்லாரையும் கைக்குள்ள வச்சிருப்பார். அவர்க்கு கார்த்திக்ன்னா பிடிக்கும். அப்பாக்கு(சதாசிவம்) அரசியலே பிடிக்காது. அதுனால அம்மா(சௌபர்ணிகா) அதிகமா அவங்க பின்னணி பற்றி யார்கிட்டயும் சொல்ல மாட்டாங்க. கார்த்திக்கும் அதைப்பற்றி பேச மாட்டான். இப்போ மாமாகிட்ட பேசுறதே உங்களுக்காக தான் செய்யுறான், அவங்க அம்மா, அப்பாக்கு தெரியாம. ப்ளான் பி ன்னா ஒன்னும் இல்லை. இந்த ப்ளானை சொதப்பினா அவங்க மாமாகிட்ட பொறுப்பை ஒப்படைக்க சொன்னான். ஆனா அவங்களை இன்னைக்கு பிடிக்க முடியலையே ”, லேசான வருத்தத்துடன் முடித்தான் சிவா.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.