(Reading time: 44 - 88 minutes)

ங்கையின் நடவடிக்கை புரியாத புதிராய் இருக்க, அருகே வந்த ஸ்ரீ, அவள் முகவாயை தன்புறம் திருப்பி,

 

“என்னாச்சுடி உனக்கு?... ”

 

ஸ்ரீயின் கேள்விப் பார்வையில் ஒரு கணம் பேசும் தன்மை இழந்து விட்டதாக எண்ணிய சந்தியாவின் மனது, விழிகளால் தன் பரிதவிப்பை வெளியிட்டது.

 

“அ..து” என ‘அது’கூட சொல்ல திணறி குரல் கம்ம, கண்கலங்கி ஏக்கமாய் ஸ்ரீயின் தோளில் சாய்ந்தவள் மீண்டும் ஊமையானாள்.

 

தங்கை வேதனையுடன் தோளில் சாய்ந்த மறு நொடியில் கோபம் மறைந்து இளகி அவளை தன்னோடு அணைத்துக் கொண்டாலும், “இவள் காதல் கீதல்ன்னு எதுலயும் சிக்கி விடக்கூடாதே! சரியாக வழி நடத்த வேண்டும்.” என்ற எண்ணத்தை கைவிடவில்லை. ஆதரவாய் அவள் தலை முடியை கோதியவாறு “சரிடி நீ கார்த்திக் மேல கோபப் பட வேண்டாம். ஆனா நான் ஏன் கோபப்பட்டேன் தெரிஞ்சிக்கோ. இந்த மாதிரி கிப்ட் குடுத்து என்ன உறவுன்னு கேக்குறதுக்கு பதிலா முறைப்படி பொண்ணு கேட்டு உன்னை அவருக்கு உரிமையான உறவா ஆக்க முயற்சி செய்யலாமே!”, என தன் எண்ணத்தை பக்குவமாக சொன்னாள்.  

 

சில நொடி மௌனத்திற்கு பின், “ம்ம்ம்…” என்று உம் மட்டும் பதிலாய் சொன்னாள் சந்தியா.

 

தோளில் சாய்ந்திருந்தவளின் நாடியை இதமாக பற்றி தன் முகத்தின் அருகே நிமிர்த்திய ஸ்ரீ , “நான் அட்வைஸ் பண்றது பிடிக்கலையா ?” கனிவாக கேட்டாள்.

 

“ப்ச்… “ என அவள் கையை எடுத்து விட்டு மீண்டும் அவள் தோளில் சாய்ந்தவள்,

 

“நீ அட்வைஸ்ஸ பண்ணலையே ஸ்ரீ. உண்மையை தான சொல்ற. எனக்கு புரியுது. “ என்ற சந்தியாவின் உடலும், உள்ளமும் சோர்ந்தது குரலில் எதிரொலித்தது.

 

“சிரி...…” என கதவருகே கணவன் குரல் கேட்க, “இருடி இதோ வர்றேன்” என்று மெல்லிய குரலில் சந்தியாவிடம் சொல்லி விட்டு, கதவை திறந்து கணவனிடம் பேசி விட்டு, மீண்டும் அவளிடம் வந்த ஸ்ரீ, “வடமொழிச் சொல் கலக்காமல் கூப்பிடுகிராராம்… சை...உங்க மாமா சிரி சிரின்னு கூப்பிட்டு நச்சு எடுக்குறதுக்கு அழு அழுன்னே கூப்பிடலாம்” என ஏரிச்சல் பட்டாள்.

 

அவள் இப்படி புலம்பும் போதெல்லாம் சந்தியா “உன்னை கல்யாணம் பண்ண கொடுமைக்கு உன் பேரை இப்படி கொஞ்சம் பஞ்சராக்கி கூப்பிடாட்டி சிரி ன்னு ஒரு வார்த்தை இருக்கிறதை கூட மறந்துடுவார்டி” கிண்டல் செய்வாள். ஆனால், இன்றோ கலகலப்பை தொலைத்து ஜன்னல் கம்பியில் லேசாக சாய்ந்து, விண்மீன் கூட்டத்து தலைவன் இல்லாமல் கருப்பு ஆடைக்குள் புகுந்து துக்கப்பட்ட வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். நிலவும், விண்மீன்களும் அவளைக் கவரவில்லை..

 

குழப்பமும் ஏக்கமும் கலந்த அவள் முகத்தைப் பார்த்த ஸ்ரீ,

 

“ஒரு வாரம் பழகுனவனுக்காக ஏண்டி உன் நிம்மதியையும் சந்தோஷத்தையும் கெடுத்துக்கிற. வெளிப்படையா சொல்றேன், எனக்கு நீ கார்த்திக்கை காதலிக்கிறியோன்னு தோணுது. காதலிக்க தைரியம் வேணும். காதலில் ஜெயிக்க எதையும் இழக்க தயாராயிருக்கணும் - பெத்தவங்க நிம்மதியையும் சேர்த்து தான். அம்மா இப்போ இருக்கிற நிலையில் அவங்க நிம்மதி கெடுறது அவங்க உயிருக்கே ஆபத்து. அப்படி விட உன்னால முடியமாடி?”

 

அக்கா கேட்டதும் திடுக்கிட்டு அவளை பார்த்த சந்தியாவிடம் “தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடுன்னு குறள் சொல்றது சென்ட் பெர்சன்ட் உண்மைடி. அம்மா வடிவு சொன்னதையே நினச்சு நினச்சு வேதனைப்பட்டு அடிக்கடி ஸ்ட்ரெஸ் ஆகுறாங்க. பூமா குழந்தையை கண்ணால பாக்கிற வரைக்கும் அவங்களுக்கு அந்த நினைப்பு போகாதுடி. இதுல நீயும்…..” என்று சொல்லும் போதே தொண்டை அடைக்க, தேய்ந்த குரலில்,“ஏதாவது பிரச்சனையை இழுத்து வச்சா, அவங்களால முடியுமா” சொல்லும் போதே கண்ணீர் வடித்தாள்.

 

“என்ன ஸ்ரீ அம்மாக்கு ஒன்னும் ஆகாது.” என்று கவலையுடன் ஆறுதல் சொல்லிக்கொண்டே அவள் கண்ணீரைத் துடைத்த சந்தியாவின் கரங்களில் முகம் புதைத்த ஸ்ரீமா, “அம்மா தெம்பா இன்னும் நிறைய வருஷத்துக்கு நம்ம கூட இருக்கணும்டி” உடல்நலம் சரியில்லாத தாயை பிரிந்து ஊருக்கு செல்ல மனதில்லாமல் அழுக,

 

“நீ வேற நம்ம அம்மா, பூமா பேத்திக்கே பிரசவம் பாப்பாங்க பாரு!” என்று அக்காவை அணைத்து தேற்றிய படி சொல்ல, “ம்ம்...” என்ற ஸ்ரீ ஒரு வினாடி அழுவதை நிறுத்தி விட்டு நிமிர்ந்து சந்தியாவை பார்த்து ,

 

“பூமா பேத்திக்கு பிரசவமா?” புரியாமல் கேட்க, நமுட்டு சிரிப்புடன் சந்தியா தலையசைக்க, “பேராசைடி உனக்கு” அழுகையும் சிரிப்பும் கலந்து சந்தியாவின் காதை திருகினாள்.

 

“ஆ...வலிக்குதுடி பிசாசு… இதுக்கு உன் வயலினே பெட்டர்”, என்றவளின் குறும்பு பேச்சில் இயல்பு நிலைக்கு வந்த ஸ்ரீமா, சந்தியாவிடம் அம்மாவைப் பற்றி பேசி எமோஷனல் ப்ளாக்மெயில் செய்து விட்டோமோ என்ற குற்ற உணர்ச்சியில்,

 

“சந்து இங்க பாரு. நான் காதலுக்கு எதிரி கிடையாது. ஆனா அதை ஆதரிக்கவும் முடியாது. கார்த்திக்கை முறைப்படி உன்னை பொண்ணு கேட்டு வரச் சொல்லு. அப்பாகிட்ட சம்மதம் வாங்கி கொடுக்கிறது என் பொறுப்பு” என்று உறுதியளித்தாள்.

 

அவள் சொன்னதும் சிரித்து விட்ட சந்தியா, “யாரு? நீங்க? அப்பாகிட்ட? சம்மதம் வாங்கி கொடுப்பீங்க?” என்று கிண்டலாக கேட்டு விட்டு பின், “நீயே பயந்தாங்கொலி பக்கடா….ஏன்டி உன்னால முடியாத விஷயத்தை பேசுற? யாரும் யார்கிட்டயும் பேச வேண்டாம். கார்த்திக்கிற்கு என்னை கல்யாணம் பண்ற ஆசையிருந்தா அவரே வரட்டும். நானா என்னை பொண்ணு கேளுன்னு எல்லாம் சொல்ல மாட்டேன்”, தன் முடிவை தெளிவாக சொன்னாள்.

 

“என்னடி இப்படி சொல்ற? அப்போ கார்த்திக் மேல உனக்கு ஆசை இல்லையா?” தன் தங்கையை ஆச்சரியமாக பார்த்து கேட்டவள், “இதற்கு முன் அவனை ஒருமையில் விளித்ததைக் கூட விரும்பவில்லையே” மனதிற்குள் குழம்பினாள் ஸ்ரீமா.

 

“பேராசை பெத்தவங்களுக்காக மட்டும் தான் பட முடியும் ஸ்ரீ”, அழுத்தமான குரலில் தன் காதலை மறைத்து அந்த பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.

 

ஸ்ரீமா குடும்பத்துடன் சென்னைக் கிளம்பி சென்ற பின், விந்தியா லக்ஷ்மிக்கு ஓய்வு கொடுத்து வீட்டு வேலைகளை கவனித்துக் கொண்டிருந்ததால் யாழினியும், அரவிந்தையும் தூங்க வைக்கும் பொறுப்பை எடுத்தாள் சந்தியா. அவளை கதை கேட்டு குழந்தைகள் நைக்க, சிண்ட்ரல்லா கதையை சொல்லிக் கொண்டிருந்தாள். “அந்த தேவதை கொடுத்த ஜிகு ஜிகு டிரஸ்சையும் தக தக தங்க செருப்பையும் போட்டு வந்த சின்டரெல்லா அப்படி ஒரு அழகு. அதை பாத்து அந்த இளவரன் அசந்து போயி, அவ கூட டான்ஸ் ஆட” என்ற சொன்ன சந்தியாவை இடை மரித்த யாழினி “எந்த பாட்டுக்கு சித்தி?” கேட்டவுடன் யோசனை செய்வது போல பாவித்த சந்தியா பின்,

மாங்குயிலே பூங்குயிலே

சேதி ஒன்னை கேளு

உன்னை மாலையிட தேடு வரும் நாளு

எந்த நாளு

முத்து முத்து கண்ணால நான்

சுத்தி வந்தேன் பின்னால

என்று பாடிக் காமிக்க, அவளின் வலதுபுறம் படுத்திருந்த யாழினி “ நல்லாவே இல்லை” என உதட்டை நெளிக்க, இடது புறம் படித்திருந்த அர்விந்த்“பாட நேணாம். கதை சொல்லு, ” சிணுங்கியவனின் கண் நிறைய தூக்கம் இருந்தது.

 

“அப்போ மணி பன்னிரெண்டு ஆகப் போச்சா அய்யோ இன்னும் இருந்தா இந்த மேஜிக் எல்லாம் மறைந்து போய் நாம யாருன்னு இந்த இளவரசனுக்கு தெரிஞ்சிடுமேன்னு சின்ட்ரெல்லா அங்கிருந்து ஓட ஆரம்பித்தா” என்ற போது, செல்போன் அழைக்க அவள் இளவரசனா இருக்குமோ என்று தறிகெட்டு ஓட ஆரம்பித்தது இந்த சின்ட்ரெல்லாவின் உள்ளம். தலையணை அருகில் இருந்த போனை ஆர்வமுடன் பார்த்தாள். அவன் இல்லை, பூமா. பூமாவிடம் இன்றைய விஷயங்களை தெரிவிக்க வேண்டாம் என அவர்கள் வீட்டில் எல்லாரும் முடிவு செய்திருந்தனர். அவளிடம் வாயை விட்டு விடக் கூடாது என கவனமாக பேசினாள் சந்தியா. அவள் நலத்தை விசாரித்த பின் பூமா,

 

“சந்து என்னடி உங்க பாஸ் இப்படி இருக்கிறாரு?”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.